சென்னை: பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த, திண்டுக்கல்லைச் சேர்ந்த நந்தினி, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. மாநிலம் முழுவதும் 94.03% மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகள் 96.38 சதவீதமும் மாணவர்கள் 91.45 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ச.நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு நேற்று, பெற்றோர் மற்றும் பள்ளிமுதல்வருடன் நந்தினி வந்தார்.பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது நந்தினியிடம், உயர்கல்வி பயில தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து என்று பல நிகழ்ச்சிகளிலும் நான் கூறி வருகிறேன். நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் 600-க்கு 600 பெற்று சாதனை படைத்துள்ள மாணவி நந்தினியும் ‘படிப்புதான் சொத்து என்று நினைத்துப் படித்தேன்’ என பேட்டியில்கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். அவரை இன்று நேரிலும் அழைத்து வாழ்த்தினேன்.
அவரது உயர்கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நமது அரசே செய்து தரும் என்ற உறுதியையும் வழங்கியுள்ளேன். எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர், தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழகத்தின் அடையாளம். ‘அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்’ என்று தெரிவித்துள்ளார்.
முதல்வருடனான சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் நந்தினி கூறியதாவது: மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ள நான், இந்த வெற்றியை என் பெற்றோர், ஆசிரியர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். முதல்வரை அவரது வீட்டில் சந்தித்ததை வாழ்க்கையில் பெற்ற பாக்கியமாக நினைக்கிறேன். எனக்கு அவர் பரிசுப் பொருட்கள் வழங்கி, உயர்கல்விக்கு உதவுவதாக தெரிவித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. முதல்வருக்கும், அரசுக்கும் நன்றி. ஆடிட்டிங் படிப்பதற்கான கல்வி நிறுவனம் தொடர்பாக உதவுவதாகவும் தெரிவித்துள்ளார் என்றார்.