போபால்: மத்திய பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் பாலத்தில் சென்ற பேருந்து, தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 குழந்தைகள், 8 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். 44 பேர் படுகாயம் அடைந்தனர்.
மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டம் பெஜாபுரா பகுதியில் இருந்து தனியார் பேருந்து நேற்று காலை 6.30 மணி அளவில் இந்தூருக்கு புறப்பட்டது. இதில் 69 பயணிகள் இருந்தனர். காலை8.30 மணி அளவில் கார்கோன் மாவட்டம் தசங்கா கிராமத்தில் உள்ள ஆற்றுப் பாலத்தில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 44 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில்சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
50 அடி உயரத்தில் இருந்து..: விபத்து குறித்து சுற்றுவட்டார கிராம மக்கள் கூறியபோது, ‘‘சுமார் 50 அடி உயர பாலத்தில் இருந்து ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது. இதுகுறித்து போலீஸாருக்கு உடனே செல்போனில் தகவல் கொடுத்தோம். அவர்கள் வருவதற்கு தாமதம் ஆனதால், இப்பகுதி மக்கள் இணைந்து, உயிருக்கு போராடியவர்களை மீட்டு டிராக்டர்கள் மூலம் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தோம். கோடை காலம் என்பதால் ஆற்றில் தண்ணீர் இல்லை. தண்ணீர் இருந்திருந்தால் உயிரிழப்பு மேலும் அதிகரித்திருக்கும்’’ என்றனர்.
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ‘மா சாரதா பஸ் சர்வீஸ்’ என்றதனியார் பேருந்து வழக்கம்போல 9-ம் தேதி காலை பெஜாபுராவில் இருந்து புறப்பட்டுள்ளது. பேருந்தில் 52 இருக்கைகள் இருந்தன. ஆனால், அளவுக்கு அதிகமாகபயணிகளை நடத்துநர் ஏற்றியுள்ளார். விபத்து நடந்தபோது பேருந்தில் 69 பயணிகள் இருந்துள்ளனர். தசங்கா பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தில் பேருந்து அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில்7 குழந்தைகள், 8 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
விபத்து குறித்து மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கோவிந்த் சிங் ராஜ்புத் கூறியபோது, ‘‘விபத்துதொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீண்ட தொலைவு செல்லும் வாகனங்களில் 2 ஓட்டுநர்கள் பணியில்இருக்க வேண்டும் என கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
முதல்வர் சிவராஜ் சிங் உத்தரவின்பேரில், அமைச்சர் கமல் படேல் சம்பவ இடத்துக்கு சென்று,மீட்பு பணிகளை விரைவுபடுத்தினார். கார்கோன் மாவட்ட அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர் பர்கா கவுர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழித்தடத்தில் பேருந்துகளில் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறுஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிவேகமாக பேருந்தைஇயக்கும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
ரூ.6 லட்சம் இழப்பீடு: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000, லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடுவழங்கப்படும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘கார்கோன் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.