கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை பதம் பார்த்து 5-வது வெற்றியை தனதாக்கி ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிப்பதுடன், அந்த அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கும் வஞ்சம் தீர்த்தது.
இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி ஷிகர் தவானின் (57 ரன்கள்) அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன் தேவையாக இருந்த போது ரிங்கு சிங் (21 ரன்கள், 10 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) பவுண்டரி விளாசி அணி வெற்றி இலக்கை எட்டவைத்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கொல்கத்தா அணியின் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் (42 ரன்கள், 23 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்கவில்லை. பந்து வீச கூடுதல் நேரம் எடுத்து கொண்டதால் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக ஐ.பி.எல்.நிர்வாகம் விதித்துள்ளது.