வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீசினால்.. இத்தனை ஆண்டுகள் சிறையா.. எச்சரிக்கும் ரயில்வே துறை!

சென்னை:
வந்தே பாரத் ரயில்கள் மீது தொடர்ந்து கல்வீச்சு நடத்தப்பட்டு வரும் நிலையில், ரயில்வே துறை ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் எத்தனை வருடம் சிறைத்தண்டனை கிடைக்கும் என்ற தகவலையும் அது வெளியிட்டுள்ளது.

துக்கத்திலும் ரயில் சேவையை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் விடப்பட்டிருக்கின்றன. 14 வழித்தடங்களில் மொத்தம் 18 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

அதிக வேகம், ஏசி பெட்டிகள், சொகுசு இருக்கைகள், உணவு என சகல வசதிகள் இருப்பதால் வந்தே பாரத் ரயில்களை மக்கள் அதிகம் தேர்ந்தெடுக்க தொடங்கியுள்ளனர்.

கல்வீச்சு தாக்குதல்கள்:
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர், சென்னையில் இருந்து கோவை என இரண்டு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ஆரம்பம் முதலாகவே வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகிறதா அல்லது பிறர் செய்வதை பார்த்து தாமும் செய்து பார்க்கலாம் என சிலர் செய்கிறார்களா எனத் தெரியவில்லை.

சென்னையிலும்..
குறிப்பாக, மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் இந்த தாக்குதல் சம்பவங்களை அதிகம் காண முடிகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட, மைசூரில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரயில் மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல, சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் மீது கொரட்டூர் – வில்லிவாக்கம் இடையே மர்மநபர்கள் நேற்று கற்களை வீசினர்.

5 ஆண்டுகள் சிறை:
இதில் ரயில்கள் சேதம் அடைவதுடன், பயணிகளும் அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த சூழலில், ரயில்கள் மீது கல்வீசினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் கூறுகையில், “வந்தே பாரத் ரயில் மட்டும் அல்ல. எந்த ரயில்கள் மீது கற்கள் வீசினாலும் 153, 154-வது பிரிவுகளின் கீழ் அது கிரிமினல் குற்றமாக கருதப்படும். இச்சட்டப்பிரிவுகளின் கீழ் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்” என அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.