சென்னை: Custody (கஸ்டடி) கஸ்டடி படத்துக்கு மலையாள படம்தான் இன்ஸ்பிரேஷனாக அமைந்தது என இயக்குநர் வெங்கட் பிரபு ஓபனாக பேசியிருக்கிறார்.
தமிழில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வரும் வெங்கட் பிரபு கடைசியாக சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கினார். டைம் லூப் கன்செப்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் தனது திரைக்கதை மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார். மெகா ஹிட்டான அந்தப் படம் சிம்புவின் இரண்டாவது இன்னிங்ஸில் தரமான கம்பேக்காக அமைந்தது. படம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்தது.
வெங்கட் பிரபுவின் கஸ்டடி: மாநாடு படத்துக்கு பிறகு நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த் சாமி, ப்ரியாமணி, ப்ரேம்ஜி அமரன் உள்ளிட்டோரை வைத்து கஸ்டடி படத்தை இயக்கியிருக்கிறார். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
தீவிர புரோமோஷன்: பைலிங்குவலாக உருவாகியிருக்கும் கஸ்டடி வெளியாக இரண்டு நாள்களே இருப்பதால் புரோமோஷன் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதனையொட்டி படக்குழுவினர் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். நேற்று சென்னையில் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நடந்தது. இதில் படத்தில் பணியாற்றியவர்கள் தங்களது அனுபவத்தை கலகலப்பாக பகிர்ந்துகொண்டனர்.
மலையாள படம்தான் இன்ஸ்பிரேஷன்: விழாவில் பேசிய வெங்கட் பிரபு, “கஸ்டடி அடர்த்த்யான கதையம்சம் கொண்ட திரைப்படம், மலையாள படமான நாயட்டு படத்தை பார்த்து இதுபோல் ஒரு படத்தை இயக்க வேண்டும் என நினைத்தேன். அதை நம் ஆடியன்ஸுக்கு ஏற்றவாறு கமர்ஷியலாக மாற்றினேன்.நாயட்டுதான் கஸ்டடி படத்துக்கு உந்துதலாக இருந்தது. முழு ஒத்துழைப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நன்றி.
இளையராஜாவின் இசையை நாடினேன்: 90களில் நடக்கும் கதையைத்தான் எழுதியிருக்கிறேன். அந்த உணர்வை திரையில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இளையராஜாவின் இசையை நாடினேன். இந்தப் படத்தில் பிரேம்ஜி அமரன் அடம்பிடித்து நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி பின்னணி இசையை அவரே சரியாக மிக்ஸும் செய்தார். படத்தில் நிறைய அச்சரியங்கள் ஆடியன்ஸுக்கு காத்திருக்கின்றன” என்றார்.
அசத்திய ப்ரோமோ வீடியோ: முன்னதாக, கஸ்டடி படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது. அதில் நாக சைதன்யாவும், சென்னை 60002க் திரைப்படத்தில் நடித்தவர்களும் இடம்பெற்றிருந்தனர். அந்த ப்ரோமோவில் வெங்கட் பிரபு குறித்து நாக சைதன்யாவிடம் அவர்கள் கேட்பது போலவும், பிறகு அவரை தங்களது டீமில் சேர்த்துக்கொள்வது போலவும் இருந்தது. அந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.