Karnataka Election 2023 :கர்நாடகாவில் பாஜக மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்..எடியூரப்பா திட்டவட்டம்!

கர்நாடகாவில் பாஜகதான் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா தேர்தல்
கர்நாடக மாநிலத்தில் 224 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.

பலத்த பாதுகாப்பு
மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன‌. அனைத்த வாக்குச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
எடியூரப்பா சாமி தரிசனம்
காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா, ஷிவமோகா தொகுதியில் உள்ள அடலிதா சவுதா வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக வாக்களிப்பதற்கு முன்பு ஷிகாரிபுராவில் ராகவேந்திரா சுவாமி கோவிலில் தனது குடும்பத்துடன் வழிப்பாடு நடத்தினார்.
நாங்கள்தான் வெற்றி பெறுவோம்
வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, கர்நாடகாவில் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, அனைத்து மக்களும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தங்களின் வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் பாஜகவுக்கு ஆதரவாகதான் வாக்களிப்பார்கள் என நான் 100 சதவீதம் உறுதியாக நம்புகிறேன்.

மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம்75 முதல் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பாஜகவுக்குதான் ஆதரவளிப்பார்கள். நாங்கள் 130 முதல் 135 இடங்களை கைப்பற்றுவோம். நிச்சயமாக மெஜாரிட்டியுடன் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. மாநிலம் முழுவதும் மக்களின் ஆதரவு எங்களுக்கு நன்றாக உள்ளது, அந்த அடிப்படையில்தான் சொல்கிறேன், நாங்கள்தான் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம். இவ்வாறு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.