கர்நாடகாவின் 224 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தல் மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், துணை ராணுவ படையினரும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. காலை முதல் பொதுமக்கள், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் ஆர்வத்துடன் தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 8.26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Karnataka Election 2023: சந்தேகமே இல்லை… மெஜாரிட்டியுடன் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்… எடியூரப்பா திட்டவட்டம்!
பெங்களூருவில் உள்ள சாந்தி நகர் செயின்ட் ஜோசப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலையிலேயே நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்கள் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றார். மேலும் கர்நாடகாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது என்ற பிரகாஷ் ராஜ் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியும் என்றும் கூறினார்.
மேலும் கர்நாடகா அழகான மாநிலமாக இருக்க வேண்டும். நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார். தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டிய நடிகர் பிரகாஷ் ராஜ், டியர் கன்னட நண்பர்களே, நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிரானவன். 40% ஊழல்வாதிகளுக்கு எதிராக என்னுடைய வாக்கை பதிவு செய்துள்ளேன். நீங்கள் உங்கள் மனசாட்சிப்படி வாக்களித்து கர்நாடகா அமைதிப் பூங்காவாக திகழ செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
O Panneerselvam: விரைவில் சசிகலாவை சந்திப்பேன்… டாப் கியருக்கு மாறிய ஓபிஎஸ்!
தனது மற்றொரு டிவிட்டர் பதில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கையை குலுக்கலாம், தென்னையை தலையில் வைக்கலாம். ஆனால் தாமரை பூவை காதில் வைக்க முடியாது என ஒரு புத்திசாலி கூறியிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸின் சின்னமான கை, ஜேடிஎஸ் கட்சியின் சின்னமான ஒரு பெண் தலையில் வைத்திருக்கும் தென்னை குருத்து மற்றும் பாஜகவின் சின்னமான தாமரை ஆகியவற்றை குறிப்பிட்டு பிரகாஷ் ராஜ் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இதேபோல் நடிகை, பாஜக பிரமுகர் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு கர்நாடக தேர்தல் குறித்து டிவிட்டியுள்ளார். அதில் வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் உங்கள் கடமை. 5.3 கோடி வாக்காளர்கள் இருப்பதால், மக்கள் வெளியே சென்று வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் மற்ற பகுதிகளுக்கு கர்நாடகா ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கட்டும், உங்கள் வாக்கு எவ்வளவு சக்திவாய்ந்த கருவியாக இருக்கும் என்பதை நிரூபிக்கவும். என பதிவிட்டுள்ளார்.