நடிகர் விஜய், ப்ளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களைச் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாகவும், அதற்கான பட்டியலை நிர்வாகிகள் தயாரித்துக்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, நடிகர் விஜய் மாணவர்களை நேரடியாகச் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிய சூழலில், விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம்,
“மாணவர்கள் நலனின் எப்போதும் அக்கறைக் கொண்டவர் தளபதி. மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்திக்கும்போதெல்லாம், மாணவர்களின் கல்வியை மேம்படுத்த உதவிகள் செய்யவேண்டும் என்று எப்போதுமே அறிவுறுத்துவார்.
அவரது அறிவுறுத்தலால்தான் தமிழ்நாடு முழுக்க விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். இந்த நிலையில்தான், பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவர்களின் பட்டியலை தளபதி தயாரிக்க உத்தரவிட்டிருக்கிறார்.
அதோடு, வரும் மே 19 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகிறது. பத்தாம் வகுப்பிலும் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் பட்டியலையும் தயாரிக்கச் சொல்லியிருக்கிறார்.
தற்போது, +2 தேர்வெழுதிய மாணவர்களின் பட்டியலைத் தயாரித்து வருகிறோம். பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான பின், அவர்களின் பட்டியலையும் தயாரித்து தளபதியிடம் கொடுக்கவுள்ளோம். இம்மாதம் இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் அவர் மாணவர்களைச் சந்திப்பார். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு நிதியுதவியும் மாதந்தோறும் ஊக்கத்தொகையும் வழங்க தளபதி முடிவெடுத்துள்ளார்” என்கிறார்கள்.
ஏற்கனவே, விஜய் மக்கள் இயக்கம் ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை விஜய் சந்திக்கவிருப்பது அரசியல் வட்டாரத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.