ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில், சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயில் அருகே கடந்த வாரம் முதல் இரண்டு முறை உயிரிழப்பு ஏற்படாத அளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருந்த நிலையில், இன்று அதிகாலை பொற்கோயில் அருகே பயங்கர சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக கடந்த வாரம் 6-ம் தேதியன்று, பொற்கோயில் அருகே ஹெரிடேஜ் தெருவில் முதல்முறையாக குண்டுவெடிப்பு நடந்தது. அதற்கடுத்த 24 மணிநேரத்தில் அதே ஹெரிடேஜ் தெருவில் இரண்டாவது முறையாக குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இந்த இரு குண்டுவெடிப்பு சம்பவத்திலும் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதுவும் ஏற்படாமல், இரண்டு பேர் மட்டும் காயமடைந்தனர். அதன்பிறகு, இந்த சம்பவத்துக்கான காரணம் என்னவென்று கண்டறியப்படவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் பஞ்சாப் காவல்துறை தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக நள்ளிரவு ஒரு மணியளவில் பொற்கோயிலின் அருகே குரு ராம் தாஸ் சத்திரம் பகுதியில் பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது.
இதுபற்றி தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சந்தேகத்தின் பேரில் பெண் உட்பட இருவரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த சத்திரத்தில் கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்துப் பேசிய பஞ்சாப் போலீஸ் கமிஷனர் நௌனிஹால் சிங், “ஒரு கட்டடத்தின் பின்னால் பலத்த சத்தம் எழுந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இது குண்டுவெடிப்பா அல்லது வேறு ஏதேனும் சம்பவமா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் சிலரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்” என்றார்.
இதுவும் குண்டுவெடிப்பு சம்பவமாக இருக்கும் பட்சத்தில் கடந்த 6 நாள்களில் நிகழ்ந்த மூன்றாவது குண்டுவெடிப்பு ஆகும். அதுமட்டுமல்லாமல், இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை எந்த குற்றவாளிகளும் கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.