சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று முக்கிய இலாக்காக்களில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், பால்வளத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டு உள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், இன்றே துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 ஆண்டு மே மாதம் ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சிக்கு 2 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
திமுக ஐடி விங் செயலாளரும், 3 முறை மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டிஆர்பி ராஜா இன்று காலை அமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் டிஆர்பி ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
அத்துடன் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சராக இருந்த நிதித்துறை, தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. தங்கம் தென்னரசு வகித்த தொழிற்துறை இலாக்கா, அமைச்சராக பதவியேற்ற டிஆர்பி ராஜாவிடமும், தமிழ் வளர்ச்சித்துறை இலாக்கா, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆவடி எம்எல்ஏ நாசரின் பால்வளத்துறை இலாக்கா, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் வசம் வழங்கப்பட்டு இருக்கிறது. மனோ தங்கராஜ் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனிடம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் இலாக்கா ஒதுக்கப்பட்ட உடனே அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமைச் செயலகத்தில் இருக்கும் பால்வளத்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு சென்று துறை அதிகாரிகளுடன் செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மை செயலாளர் ஆ. கார்த்திக், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் ந.சுப்பையன், ஆவின் இணை மேலாண்மை இயக்குநர் கே.எம். சரயு ஆகியோர் கலந்துகொண்டு அமைச்சருக்கு துறை செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.