சென்னை: வார வாரம் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகின்றன. சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் டயர் 3க்கும் கீழுள்ள நடிகர்கள் நடிக்கும் படங்கள் நல்லா இருந்தால் கூட பெருவாரியான ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர்.
சில நடிகர்கள் ஹீரோவாக நடித்து படம் நன்றாக இருந்தால் கூட அந்தப் பக்கம் போகவே மாட்டேன் ஓடிடியில் வந்தால் ஒரு முறை பார்த்துக் கொள்கிறேன் என ரசிகர்கள் முற்றிலுமாக உஷார் ஆகி விட்டனர்.
ஆனாலும், சில நடிகர்கள் இன்னமும் ஹீரோவாகவும், ஹீரோயினாகவும் தாங்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆனால், போதும் என தொடர்ந்து நடித்து வருகின்றனர்.
இந்த வாரம் மே 12ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழில் 4 புதிய படங்கள் வெளியாகின்றன. இதில், புக் மை ஷோவில் அதிக லைக்குகளை அள்ளிய படம் எது என்பது குறித்தும் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் எந்த படத்துக்கு உள்ளது என்பது குறித்தும் இங்கே பார்க்கலாம் வாங்க..
வெங்கட் பிரபுவின் கஸ்டடி: சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள கஸ்டடி திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் அரவிந்த் சாமி நடித்துள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சிம்புவின் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், கஸ்டடி படமும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க அதிக ஆர்வத்தை காட்டி உள்ளனர். புக் மை ஷோவில் சுமார் 80 ஆயிரம் பேர் இந்த படத்திற்கு லைக் போட்டுள்ளனர்.
மணிகண்டனின் குட் நைட்: விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன் நடிப்பில் உருவாகி உள்ள குட் நைட் திரைப்படத்தில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
புக் மை ஷோவில் வெறும் 3 ஆயிரம் பேர் மட்டுமே இந்த படத்திற்கு லைக் போட்டுள்ளனர். ஆனால், படம் நன்றாக வந்திருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருவதால், வார இறுதியில் படம் பிக்கப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா: ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமிய பெண்ணாக நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படமும் நாளை வெளியாகிறது.
சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி மற்றும் ஓடிடியில் வெளியான புர்கா உள்ளிட்ட படங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக் கருத்துகள் இருந்த நிலையில், இந்த படத்திலும் அதே போலத்தான் சர்ச்சைகள் இருக்கும் என கருதி இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் சுத்தமாக ஆர்வமே செலுத்தவில்லை என்று தெரிகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து ஹீரோயினாக கடந்த 6 மாதங்களில் 6 படங்களை வெளியிட்டும் பெரிதாக ஒரு படமும் ஓடவில்லை. இந்நிலையில், ஃபர்ஹானா திரைப்படம் எந்தளவுக்கு ஓடப் போகிறது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம். இந்த படத்துக்கு புக் மை ஷோவில் வெறும் 2 ஆயிரம் பேர் மட்டுமே லைக் போட்டுள்ளனர்.
சாந்தனுவின் இராவணக் கோட்டம்: மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் தன்னை ஏமாற்றி விட்டார் என சமீபத்தில் வெளிப்படையாக பேசிய நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகி உள்ள ராவணக் கோட்டம் படத்திற்கு வெறும் 765 பேர் மட்டுமே லைக் போட்டுள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ் வின்னர்: இந்நிலையில், இந்த வாரம் வெளியாகும் 4 படங்களில் அதிக வசூலை நாக சைதன்யாவின் கஸ்டடி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே கடந்த 2 வாரங்களாக பாக்ஸ் ஆபிஸில் கர்ஜனை செய்து வரும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படமும் இந்த வாரம் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.