சென்னை, ஆண்டர்சன் சாலையில் வசித்து வருபவர் கௌதம் (51). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன்னுடைய குடும்ப நண்பரான கேரளாவைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர்மீது மோசடி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி, துணை கமிஷனர் மீனா மேற்பார்வையில் கூடுதல் கமிஷனர் அசோகன், உதவி கமிஷனர் ஜான்விக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதாவின் டீம் குற்றம்சாட்டப்பட்ட சுப்பிரமணியைத் தேடிவந்தது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்தார். இந்தச் சூழலில் சுப்பிரமணி, நள்ளிரவு நேரத்தில் குடும்பத்தினரைச் சந்திக்க வரும் ரகசிய தகவல் சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதாவுக்குக் கிடைத்தது. உடனடியாக சுப்பிரமணியின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்த போலீஸார், அவரைக் கைதுசெய்து சென்னைக்கு அழைத்துவந்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவின் EDF பிரிவு போலீஸார் நம்மிடம் பேசுகையில், “புகாரளித்த கௌதம், எம்.பி.ஏ படித்துவிட்டு வெளிநாட்டில் வேலைப்பார்த்து வந்திருக்கிறார். அப்போது கெளதமுடன் கேரளாவைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரும் வேலைப்பார்த்திருக்கிறார். அதனால் கெளதமும் சுப்பிரமணியும் நெருங்கிய நண்பர்களாகியிருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர்களுக்கு வந்தபிறகும் கெளதமும் சுப்பிரமணியும் சந்தித்து வந்திருக்கிறார்கள். அதனால் இரண்டு குடும்பத்தினரும் நட்பாகப் பழகிவந்த சூழலில், கௌதம் ஆன்மீகத்தில் அதிக பற்று கொண்டவராக இருந்ததால், சுப்பிரமணியும் தன்னை `சாய்பாபாவின் சீடர்’ என்றே கெளதமிடம் சொல்லி வந்திருக்கிறார். அதனால் இருவரும் சாய்பாபாவின் கோயில்களுக்கு சென்று வந்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து கௌதமின் அம்மா, அப்பா என அடுத்தடுத்து உயிரிழந்ததால் அதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்ட சுப்பிரமணி, சென்டிமென்ட்டாக கெளதமை ஏமாற்றத் தொடங்கினார்.
பூஜை அறையில், `இதோ… உன் அம்மாவின் ஆன்மா என்னோடு பேசுகிறது’ என்று சொல்லி கௌதமை நம்பவைத்திருக்கிறார். அம்மா, அப்பா சென்டிமென்ட்டைச் சொல்லியே கெளதமிடமிருந்து சுப்பிரமணி 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பணம் பறித்து வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் சுப்பிரமணியின் மோசடிகளைத் தெரிந்துகொண்ட கௌதம், பணம் கொடுப்பதை நிறுத்தியிருக்கிறார். அதன்பிறகு சுப்பிரமணி, `உனக்கு சூனியம் வைத்து விடுவேன்’ என கெளதமை மிரட்டத் தொடங்கியிருக்கிறார்.
அதனால் பணத்தை இழந்த கௌதம், தன்னுடைய நண்பரான சுப்பிரமணிமீது புகாரளித்தார். அப்போது சுப்பிரமணிக்கு ஆன்லைன் மூலமாக 2 கோடி ரூபாய் வரை அனுப்பியதற்கான ஆதாரங்களையும் கொடுத்தார். அதனடிப்படையில்தான் சுப்பிரமணியைக் கைதுசெய்திருக்கிறோம். மாந்திரீகம் எனச் சொல்லி கெளதமை ஏமாற்றிய சுப்பிரமணி, ஆடம்பரமாக வாழ்ந்து வந்திருக்கிறார். நண்பனிடம் பணம் பறிக்க போலி சாமியாராக நடித்த சுப்பிரமணியிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.