மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 01.12.2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு குறித்து தொழிற்சங்கங்கள், பொறியாளர் கழகம் மற்றும் பொறியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (10.05.2023) சென்னை தலைமை அலுவலகத்தில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டது.
ஆறு மாதங்களாக அரசு பணிமனை முன்பு காத்துக் கிடக்கும் நடத்துனர்
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “01.12.2019 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கான குழு கடந்த ஆட்சியில் 07.12.2019ல் தான் அமைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த கூட்டம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று இன்றோடு 8 முறை தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி இன்று முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, பின்வருமாறு அறிவிக்கப்படுகிறது.
ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் 01.12.2019-ம் நாளன்று பெறும் ஊதியத்தில் ஆறு சதவிகிதம் (6%) ஊதிய உயர்வு. 01.12.2019-ம் நாளன்று, 10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக (Service Weightage) 01.12.2019-ம் நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்.
ஊதிய உயர்வின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.527.08/- கோடி கூடுதல் செலவாகும். இவ்வூதிய உயர்வு மூலம் ஏற்படும் நிலுவைத் தொகை 01.12.2019-ம் நாள் முதல் கருத்தியலாகக் (Notional) கணக்கிட்டு 01.04.2022ம் நாள் முதல் பணப் பலன்கள் வழங்கவும், 01.04.2022 முதல் 31.05.2023 வரை வழங்கப்படவேண்டிய நிலுவை தொகையினை இரண்டு தவணைகளாக வழங்கவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த நிலுவைத் தொகை ரூ.516.71/- கோடி.
மேலும் 01.12.2019 முதல் 31.03.2022 வரையிலான 28 மாதத்திற்கான நிலுவைத் தொகையில் ஒவ்வொரு பணியாளருக்கும் குறைந்தபட்சம் தொகுக்கப்பட்ட நிலுவைத் தொகையாக ரூ.500/- வீதம் கணக்கிட்டு இந்நிலுவைத் தொகையினை மேற்குறிப்பிட்டவாறு இரு தவணைகளாக வழங்கப்படும். இதற்காக ரூ.106 கோடி கூடுதல் செலவாகும்.
ஊதிய உயர்வின் மூலம் பயன்பெறும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை 75,978. 10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக (Service Weightage) 3 சதவிகிதம் ஊதிய உயர்வு மூலம் பயன்பெறும் பணியாளர்களின் எண்ணிக்கை 62,548.
வேலைப்பளு குறித்த ஒப்பந்தம் தொழிற்சங்கங்களுடன் பின்னர் பேசி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.