\"கண்ட கருமத்தோட பஸ்ஸில் ஏன் வர்ற?\" பறை இசைக் கருவியுடன் வந்த மாணவியை நடுவழியில் இறக்கிய நடத்துநர்

நெல்லை: நெல்லையில் பறை இசைக் கருவியுடன் அரசு பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவியை நடத்துநர் நடுவழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் கணேசனின் மகள் ரஞ்சிதா. இவர் சீதபற்பநல்லூர் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படிக்கிறார். இவர் கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதற்காக டிரம்ஸ், தோள்பறை இசைக் கருவிகளையும் எடுத்து வந்துள்ளார். கல்லூரியில் நிகழ்ச்சி முடிந்து மதுரை செல்லும் பேருந்தில் இசைக் கருவிகளுடன் ஏறினார். மாணவி இசைக் கருவிகளுடன் ஏறியதை பார்த்த அந்த பேருந்தின் நடத்துநர் மாணவியிடம் சென்றார்.

அப்போது அவர், பேருந்தில் மக்கள் பயணிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. மற்ற பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என கறாராக கூறிவிட்டார். உடனே மாணவி இசைக் கருவிகளுக்கு வேண்டுமானால் லக்கேஜ் டிக்கெட் எடுப்பதாக மாணவி கூறினார். ஆனால் இதை கன்டக்டர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

தொடர்ந்து மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கன்டக்டர், கண்ட கருமத்துக்கெல்லாம் டிக்கெட் தர முடியாது. இப்போ பஸ்ல இருந்து இறங்குறியா இல்லை இதையெல்லாம் தூக்கி எறியட்டுமா என சிறிதும் மனசாட்சியின்றி கேட்டுள்ளார். உடனே அந்த மாணவி இரவு நேரத்தில் இறக்கிவிட்டால் எப்படி என கேட்டுள்ளார்.

அப்படியும் மனதளராக கன்டக்டர் இதையெல்லாம் தூக்கிகிட்டு ஏறும் போதே யோசிச்சிருக்கணும். நீ இறங்கு என கூறி அந்த மாணவியை வண்ணாரப்பேட்டை அருகே இறக்கிவிட்டுள்ளார். இதனால் அழுது கொண்டே இறங்கிய மாணவியை அங்கிருந்த தன்னார்வலர்கள் அரைமணி நேரம் பாதுகாப்பாக இருந்து வேறு பேருந்து வந்ததும் அவரை அதில ஏற்றிவிட்டனர்.

அரசு பேருந்து நடத்துநரின் மனிதாபிமற்ற செயலை அங்கு கூடியிருந்தவர்கள் கண்டித்தனர். பொதுவாக பஸ்ஸில் லக்கேஜுடன் ஏறினால் அதற்கென தனிக்கட்டணம் வசூலிக்கப்படும். துணிப்பை, சிறிய சிறிய பைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. பெரிய பெரிய பொருட்கள், மூட்டைகள் என்றால் அதற்கு அந்த பயணி செல்லும் தூரத்திற்கேற்ப டிக்கெட் வசூலிக்கப்படும்.

ஆனால் இந்த கன்டக்டர் அந்த மாணவி டிக்கெட் எடுக்க முன்வந்தும் ஒப்புக் கொள்ளவில்லை. அதோடு நமது பாரம்பரிய இசைக் கருவியை கண்ட கருமம் என்றெல்லாம் விமர்சனம் செய்ததற்கு அங்கிருந்தோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இரவு நேரத்தில் இப்படி அந்த மாணவியை நடுவழியில் இறக்கிவிட்டு அதனால் அந்த மாணவிக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு என்பதை கூட அந்த கன்டக்டர் யோசிக்கவில்லை.

இதே போல் மீன் கூடையுடன் வருவோர், கருவாடு கூடையுடன் வருவோர்களை எல்லாம் முதியவர்கள், வறியவர்கள் என்று கூட பார்க்காத சில கன்டக்டர்கள் பேருந்தில் ஏற்றாமலேயே இறக்கிவிட்டு மெமோ வாங்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. அப்படியிருக்கும் போது ஒரு பொறுப்பான அரசு ஊழியராக நடந்து கொள்ளாமல் ஏதோ பேருந்து அவர் குடும்பச் சொத்து போல் நடந்து கொண்ட கண்டித்தக்கது என்கிறார்கள்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.