சூப்பர் விசா திட்டம் என்பது, கனடாவில் குடியுரிமை அல்லது நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை தங்களுடன் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு தங்கவைக்க அனுமதி அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
யார் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்?
கனேடிய குடிமகன் அல்லது கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற ஒருவரின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
அப்படி சூப்பர் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்களை கனடாவுக்கு வரவேற்கு தங்கள் மகன், மகள் அல்லது பேரப்பிள்ளைகள், தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கான செலவுகளை கவனித்துக்கொள்வோம் என்று உறுதியளிக்கும் ஒரு கடிதத்துடன், குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் மற்றும் தங்களை கனடாவுக்கு வரபேற்பவரின் கனேடிய குடியுரிமை அல்லது நிரந்தரக் குடியிருப்பு அனுமதியின் நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.
கனடாவில் பெறப்பட்ட, செல்லத்தக்க மருத்துவக் காப்பீடு வைத்துள்ளதற்காக ஆதாரத்தையும் சமர்ப்பிப்பது அவசியம்.
வருவாய் ஆதாரம்
தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை கனடாவுக்கு வரவேற்கும் கனேடிய குடிமகன் அல்லது கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற நபர், தங்கள் வருவாய், தங்கள் குடும்பத்தினரின் தேவைகளை சந்திக்கப்போதுமானது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டும்.
பிற நிபந்தனைகள்
கனடாவுக்கு வர விண்ணப்பித்துள்ள, கனேடிய குடிமகன் அல்லது கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற ஒருவரின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி, தங்கள் சொந்த நாட்டுடன் எத்தகைய உறவு வைத்துள்ளார்கள், எதற்காக கனடா வருகிறார்கள், அவர்களுடைய குடும்பம், வருவாய், சொந்த நாட்டில் அவர்களுடைய நிதி மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவை குறித்தும் கனடா அதிகாரிகள் சோதிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.