சென்னை: தேசிய கல்விக் கொள்கையைத் தழுவி தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கப்படுகிறது என்ற பேராசிரியர் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று உயர்நிலைக் குழுவின் தலைவர் நீதிபதி முருகேசன் கூறியுள்ளார்.
தமிழக அரசின் மாநில உயர்நிலைக் கல்வி குழுவில் இருந்து விலகிய பேராசிரியர் ஜவஹர் நேசன் வியாழக்கிழமை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழக அரசு கடந்த வருடம் ஏப்ரல் மாதம், தமிழ்நாட்டிற்கென்று தனித்துவம் வாய்ந்த ஒரு கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. தேசிய கல்விக் கொள்கையைப் புறக்கணித்து அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு மாற்றாக மாநில அளவில், மாநில மக்களின் விருப்பம், எதிர்பார்ப்புகள், இளைஞர்களின் வளர்ச்சியென அனைத்தையும் கணக்கில் கொண்டு அதன் அடிப்படையில், ஒரு தனித்துவம் வாய்ந்த கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டுமென அரசு ஆணை பிறப்பித்தது.