காசா: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீன ஜிகாத் பிரிவின் தளபதி உட்பட 27 பேர் பலியாகி இருப்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மேலும் இந்தத் தாக்குலில் பாலஸ்தீனம் ஜிகாத் அமைப்பை சேந்த தலைவர்கள் பலரும் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசாவின் தென் பகுதியில் உள்ள பாலஸ்தீன ஜிகாத் அமைப்பின் கட்டிடங்களில் இன்று காலை வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை காசா பகுதியில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 60க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலனவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகின்றது.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும்போது, “ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை நோக்கித்தான் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இதில் யாரும் மறைந்து கொள்ள முடியாது.” என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் பாலஸ்தீன ஜிகாத் அமைப்பின் தளபதி காலி கொல்லப்பட்டார். சமீபத்தில் இஸ்ரேலில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்குப் பின்னணியில் காலிதான் இருந்தார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இஸ்ரேல் சிறையில் இருந்த பாலஸ்தீனத்தின் காதர் அட்னான் கடந்த மூன்று மாதங்களாக உணவு உண்ணாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். மேலும், இஸ்ரேல் அரசின் மருத்துவ உதவிகளையும் நிராகரித்தார். இந்த நிலையில் சிறையில் காதர் அட்னான் உயிரிழந்தார். காதர் அட்னானின் மறைவைத் தொடர்ந்து பாலஸ்தீன கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது. மேலும் காசாவில் காதர் அட்னானுக்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் பதாகைகள் ஏந்தி இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட்டனர். இந்த நிலையில் பாலஸ்தீனத்தின் ஜிகாத் அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.