முக்கனிகளுள் மாம்பழங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அதுவும் கோடைக்காலம் என்றாலே நம் நினைவுக்கு வரும் பழங்களில் மாம்பழம் முக்கியமான ஒன்று. கோடைக்காலம் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. மாம்பழங்கள் கடைகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் எப்படி இருக்கிறது? என்று பெங்களூரில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி சங்கரனிடம் கேட்டபோது,
“மாம்பழ விளைச்சலைப் பொறுத்தவரை, நவம்பர்-டிசம்பர் காலகட்டத்தில் குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு குளிர் இருக்க வேண்டும். இதோடு மண்ணில் ஈரப்பதம் மிகவும் குறைவாக இருக்க வேண்டும். இது சரியாக இருந்தால் ஜனவரி மாதத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கிவிடும். அதன்பின்னர் மே-ஜூன் மாதங்களில் மாம்பழங்களில் மகசூல் நன்றாக இருக்கும்.
கடந்த டிசம்பர் மாதம் மழை பெய்துவிட்டது. அதனால் மாமரங்களில் பூக்கள் குறைவாகத்தான் பூத்திருந்தது. இன்னும் சில மரங்களில் சிறிய இடைவேளைகளில் இரண்டு மூன்று தடவை பூக்கள் பூத்துவிட்டது. அதனால் காய்கள் காய்ப்பதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது. இந்த வருடம் மாமரங்களில் தாமதமாகத்தான் பூக்களே பூக்கத் தொடங்கியது.
கடந்தாண்டு போலவே இந்தாண்டும் மாம்பழ விளைச்சல் குறைவு. இதற்கு பூச்சிகளும் ஒரு முக்கிய காரணம் ஆகும். காலநிலை மாற்றங்களால் ஒரு சில மாம்பழ ரகங்களில் பூச்சிகள் வருகின்றன.
இந்த ஆண்டு பெங்களூரா போன்ற ஒரு சில வகை மாம்பழ ரகங்களில் மட்டுமே விளைச்சல் நன்றாக இருக்கிறது. மற்றபடி கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் மாம்பழம் விளைச்சல் குறைவுதான். இருப்பினும் விலை ஓரளவுக்கு நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் சரியான முறையில் அறுவடை செய்து அடிபடாமல், சேதாரம் இல்லாமல் விற்பனை செய்தால் ஓரளவுக்கு லாபம் பார்த்துவிடலாம்” என்றார்.
இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாந்தகுமார், “கடந்த ஆண்டு மாதிரியான காலநிலை தான் இந்த ஆண்டும் இருந்தது. ஆனால் கடந்த மாம்பழ சீசனைவிட இந்த மாம்பழ சீசனில் மகசூல் 10 சதவீதம் அதிகம். இதற்கு விவசாயிகளின் முயற்சி முக்கிய காரணம் மற்றும் சரியான நேரத்தில் பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்துகளை தெளித்து விளைச்சலை பாதுகாத்தனர் என்று கூறலாம்.
மா விளைச்சலுக்கு ஏற்ற காலநிலை கடந்த 3 ஆண்டுகளாகவே சாதகமாக இல்லையென்பதால் விளைச்சல் குறைவாகத்தான் இருந்து வருகிறது. 1990-களுக்கு முன்னால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40,000 ஹெக்டேர் பரப்பில் நடந்து வந்த மா சாகுபடி இன்று 80,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து உற்பத்தி செய்து கோவை, பொள்ளாச்சி, தென் மாவட்டங்கள் என்று மாம்பழங்கள் செல்லும். இன்று அந்தந்த மாவட்டங்களிலேயே மா விளைச்சல் அதிகரித்துவிட்டது. இன்று ஜூஸ் பேக்டரிகளையே நம்பி இருக்கிறோம். ஜூஸ் பேக்டரிகள் இல்லையென்றால் மா விவசாயம் மிகப்பெரிய கேள்விக்குள்ளாகும். இப்போது கடந்த சில ஆண்டுகளாக மூன்று பங்கு செலவு, ஒரு பங்கு லாபம் என்பதே மா விவசாயத்தில் இருந்து வருகிறது. இதில் கெட்டிக்காரத்தனமாக மாம்பழங்களை விற்பனை செய்து வரும் விவசாயிகளின் நிலை பரவாயில்லை.
மா விவசாயத்தில் எதிர்பார்க்கும் லாபமில்லை என்பதால் சில விவசாயிகள் மாமரங்களை வெட்டிவிட்டு மற்ற பயிர்களைத் தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகி இருக்கிறது. அரசு மா சாகுபடி இனி ஊக்குவிக்கக் கூடாது. தற்போது உற்பத்தியாகும் மாம்பழங்களுக்கு நல்ல விலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆந்திர மாநிலத்தில் மா உற்பத்தி அதிகரித்துவிட்டது. அதுவும் விலை குறைவுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
தற்போது செந்தூரா சந்தை விலை கிலோ 25 ரூபாய், ஜூஸ் பேக்டரிக்கு 17 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெங்களூரா சந்தை விலை 22 ரூபாய், ஜூஸ் பேக்டரிக்கு 18 ரூபாய், காதர்(அல்போன்சா) சந்தை விலை 50- 60 ரூபாய், ஜூஸ் பேக்டரிக்கு 42 ரூபாய், மல்கோவா சந்தை விலை 50-60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அடுத்து அறுவடையாக இருக்கும் நீலம் கிலோவுக்கு 20 ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.