சென்னை: டிடிவி தினகரன் + ஓபிஎஸ் இருவரும் இணைந்துள்ள நிலையில், இந்த இணைப்பு யாருக்கு சாதகமாக அமைய போகிறது? என்ற விவாதங்கள் சோஷியல் மீடியாவில் நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், இந்த விவாதத்தின் முடிவில், எதிர்பாராத வகையில் இப்படி ஒரு ரிசல்ட் கிடைத்துள்ளது வியப்பை கூட்டி வருகிறது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்துள்ளார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.. இவர்கள் 2 பேரையும் சேர்த்து வைத்ததே மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் என்று தெரிகிறது.
இதையடுத்து, ஓவிஎஸ், அமமுகவில் இணைவாரா? என்ற சந்தேகங்கள் றெக்கை கட்டி பறக்கின்றன.. ஆனால், அவர் பாஜகவில் இணையலாம் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.. தனிக்கட்சி தொடங்கலாம் என்று இன்னொரு சாரார் சொல்கிறார்கள்.. ஆனால், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை..
ஜேசிடி பிரபாகர்: ஆனால், தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததன் மூலம், தென்மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை தங்களால் அள்ள கிடைக்கும் என்று ஜேசிடி பிரபாகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் – டிடிவி தினகரன் இணைவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் வராது என்று மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இப்படி 2 தரப்பிலும் மாறி மாறி கருத்துக்கள் எழுந்தபடியே உள்ளது.. அப்படியானால், இவர்களின் இணைப்பு யாருக்குதான் சாத்தியமாக அமைய போகிறது? என்ற சந்தேகம் கிளம்புகிறது.
டிடிவி தினகரன்: ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே பாஜகவுடன் நெருக்கமாக இருந்து வருபவர்.. எனினும் திடீரென எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கம் வைத்து, கூட்டணியையும் டெல்லி உறுதி செய்தது, ஓபிஎஸ் தரப்பினருக்கு மட்டுமல்லாமல், தினகரன், சசிகலா தரப்பிற்கும் அதிர்ச்சியை தந்திருக்கிறது.. இதற்கு பிறகுதான், தங்கள் பலத்தை காட்டவே, ஓபிஎஸ் + டிடிவி தினகரன் + சசிகலா ஆகியோர் ஒன்றிணைந்துள்ளதாகவும், அதிமுகவில் இருந்து தவிர்க்கவே முடியாத சக்திகள் தாங்கள் என்பதை உணர வைப்பதற்காகவே இப்படியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
அதாவது ஒருபக்கம், தங்கள் பலத்தை பாஜகவுக்கு தெரியப்படுத்துவது, மற்றொருபக்கம் தென்மண்டல வாக்குகளை, திமுக + எடப்பாடி தரப்புக்கு இழந்துவிடாமல் தங்களிடம் தக்கவைப்பது என டபுள் ரூட்டை போட்டு, ஓபிஎஸ் + தினகரனின் அரசியல் நகர்கிறதாம்.
ஆனால், அரசியல் விமர்சகர்களோ, இதற்கு நேர்மாறான கருத்தை பதிவு செய்கிறார்கள்.. ஓபிஎஸ் இப்போது எடுத்துள்ள இந்த முடிவால் அவரது செல்வாக்கு சரியும் என்றே கணித்துள்ளார்கள்.. அவர்கள் இதை பற்றி சொல்லும்போது, “சமூக ரீதியாக, வாக்குகளை பிரிக்க நினைப்பது எந்த காலத்திலும் எடுபடாது.. காரணம், எல்லா சமூகத்தினரும் எல்லா கட்சிகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்..
இரட்டை இலை: அவ்வளவு ஏன்? அன்று எம்ஜிஆர் கட்சி தொடங்கி மாயத்தேவர் வெற்றி பெற்ற காலம் முதல் அந்த சமூகத்தில் அதிமுகவுக்கு கணிசமான செல்வாக்குகள் இருந்து கொண்டுதான் உள்ளது.. இதற்கெல்லாம் காரணம், கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் மீது தீவிர பற்று கொண்டவர்கள் தொண்டர்கள்.. அதனால், அதிமுக வெற்றி பெற நினைப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் என்று மட்டுமே பார்த்து ஓட்டுப்போட மாட்டார்கள்.. அதனால், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை ஆதரிக்கவும் யோசிப்பார்கள்.
இன்னொரு விஷயத்தையும் இங்கு நாம் யோசிக்க வேண்டி உள்ளது.. வழக்கமாக ஒவ்வொரு தேர்தலிலும் டிடிவி தினகரன் பிரிக்கும் வாக்குகள் திமுகவின் அதிருப்தி வாக்குகள் ஆகும்.. ஆனால், கடந்த எம்பி தேர்தலிலும்சரி, சட்டமன்ற தேர்தலிலும்சரி, அமமுக தனியாக நின்று வெற்றி பெற முடியவில்லை.. அதேசமயம், சில தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை தடுக்கவே செய்தது.. அப்படி இருக்கும்போது, அதிமுகவின் தொண்டர்கள், யாருக்கு ஓட்டு போடுவார்கள்? தினகரனுக்கா? எடப்பாடிக்கா?
கிளைமாக்ஸ்: இயல்பாகவே, அதிமுக என்று வரும்போது, எடப்பாடி பழனிசாமிக்குதான் ஓட்டுக்களை போடுவார்கள்.. ஓபிஎஸ், தினகரன் பக்கம் போனாலும்சரி, நிச்சயம் அதிமுகவை தொண்டர்கள் பலவீனம் அடைய விடமாட்டார்கள். அந்தவகையில், ஓபிஎஸ் + தினகரனின் இணைப்பானது, அவர்கள் இருவரையும்விட எடப்பாடி பழனிசாமிக்கே சாதமாக இருக்கும் என்று கருத்துக்களை சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. என்னதான் நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!