கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்-பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள், முதியவர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் பிரதமர் மோடி அறிவித்தார். கேரளாவை உலுக்கிய இந்த விபத்துக்கு அதிகப்படியான பயணிகளை படகில் ஏற்றி சென்றதே காரணம் என்பதும், மீன்பிடி படகை சுற்றுலா படகாக மாற்றி அமைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த படகின் உரிமையாளர் நாசர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாட்களுக்கு ரிமாண்ட் செய்யப்பட்டார். மேலும் நாசர் தலைமறைவாக இருக்க உதவிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே விபத்துக்குள்ளான படகை ஓட்டிய தினேசனையும், ஊழியர் சஹாய்யையும் போலீசார் தேடி வருகின்றனர். படகை ஓட்டிய தினேசனுக்கு உரிமம் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.