ஐதராபாத்: சிறப்பு வகுப்புகள் எதற்கும் போகாமல், யூடியூப்பில் போட்டி தேர்வுகளுக்கு தேவையான பாடங்களை பார்த்து தேர்வுக்கு தயாரான ஆந்திர இளைஞர் ரயில்வேயில் இரண்டு பணியிடங்களுக்கு தேர்வு ஆகியுள்ளார். வறுமை நிலையிலும் சாதித்த இந்த இளைஞர் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இன்றைய கால கட்டத்தில் அரசு வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது. அரசு மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலையை எப்படியாவது ஒரு வேலையில் சேர்ந்து விட வேண்டும் நாடு முழுவதும் லட்சகணக்கான இளைஞர்கள் கடுமையாக படித்து வருகின்றனர்.
டிகிரி முடித்தது முதல் வேறு வேலைக்கு எதுவும் போகாமல் அரசு வேலைக்காகவே ஆண்டுக் கணக்கில் படித்து வரும் இளைஞர்களை பல இடங்களிலும் நாம் காண முடிகிறது. தமிழகத்தில் கூட டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்காக படிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை காண்கிறோம்.
அரசு வேலைக்காக நடத்தப்படும் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்காக பல கோச்சிங் சென்டர்களும் இருக்கின்றன. இதில் சேர்ந்து படிப்பதற்கு ஆயிரக்கணக்கில் கட்டணமும் வசூலிக்கப்படுவதுண்டு. இப்படி கோச்சிங் செண்டர்களில் சேர்ந்து ஆயிரங்களை செலவும் செய்து தேர்வர்கள் படித்து வரும் சூழலில், ஆந்திராவில் ஒரு இளைஞர் யூடியூப்பில் போட்டி தேர்வுகள் குறித்த வீடியோக்களை மட்டுமே பார்த்து ரயில்வே தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளர்.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இன்றைய இளைய சமுதாயம் பாழ்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதை பயனுள்ள வகையிலும் பயன்படுத்தலாம் என்ற நிருப்பதி காட்டியிருக்கிறார் போன்தா திருப்பதி ரெட்டி என்ற இளைஞர். இது குறித்தவிவரம் வருமாறு:-
ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பொசுபல்லி கிராமத்தை சேர்ந்தவர் போன்தா திருப்பதி ரெட்டி. பி.எஸ்.சி கணிதம் படித்த இவர் எப்படியாவது ரயில்வே துறையில் வேலைக்கு ச சேர்ந்து விட வேண்டும் என்ற கனவில் இருந்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக இவருக்கு கோச்சிங்க் செண்டர் சென்று சேர்ந்து படிக்க முடியவில்லை.
எனினும் மனம் தளராத திருப்பதி ரெட்டி , யூடியூப் மூலமாகவே படித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தார். அதன்படி யூடியூப்பில் பொது அறிவு, ரீசனிங் உள்பட போட்டித்தேர்வுகளுக்கான வீடியோக்களை மட்டும் பார்த்து படித்து வந்துள்ளார். ரயில்வே பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் ரயில்வே தேர்வு வாரியம் நடத்திய தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார். இதில், தென்மேற்மேற்கு ரயில்வே பிரிவில் விண்ணப்பித்த திருப்பதி ரெட்டிக்கு கிரேடு 4 உதவியாளர் மற்றும் டிக்கெட் கிளர்க் பணி கிடைத்தது.
தனது கனவு நிறைவேறியதால் மகிழ்ச்சியில் திளைத்த திருப்பதி ரெட்டி இது பற்றி கூறுகையில், ” இந்த மாத இறுதியில் எனக்கு பணி நியமன ஆணை கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறேன். எனது தந்தையுடன் விவசாய வேலைகள் செய்த படியே இந்த தேர்வுக்கு படித்து வந்தேன். எனது குடும்ப நிதி நிலைமை காரணமாக நான் கோச்சிங் கிளாஸ் எதற்கும் செல்லவில்லை. ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரங்கள் படித்து வந்தேன்” என்றார்.
வறுமையை பொருட்படுத்தாது யூடியூப் தளத்தில் மூலமாகவே படித்து தனது கனவை நிறைவேற்றிய திருப்பதி ரெட்டி, சமூக வலைத்தளங்களில் பொழுதை போக்கி நேரத்தை வீணடித்துக் கொண்டு இருக்கும் இளைய தலைமுறையினருக்கு மத்தியில் அதை நல்ல விதமாகவும் பயன்படுத்தி சாதிக்கலாம் என்பதை காட்டும் ஊக்க சக்தியாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.