சென்னையில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். சிலிண்டர் புக் செய்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் புதிய சிலிண்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை: காரில் சிலிண்டர் வெடித்து விபத்து; 5 பேர் கைது !
தமிழகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமே சமையல் கியாஸ் சிலிண்டர்களை விநியோகித்து வருகின்றன. மாநிலத்திலேயே சென்னையில் தான் கியாஸ் சிலிண்டர்களின் தேவை அதிகமாக உள்ளது. சென்னைக்கு மட்டும் தினமும் 45 ஆயிரம் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, சமீபகாலமாக பழைய கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
இதுபோன்ற பழைய சிலிண்டர்களால் பரவலாக விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து, பழைய சிலிண்டர்களுக்கு மாற்றாக புதிய கியாஸ் சிலிண்டர்களை வாங்கும் நடவடிக்கையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஈடுபட்டு வந்தது.
இந்த சூழலில், புதிய சிலிண்டர்கள் கிடைப்பதில் திடீர் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கியாஸ் சிலிண்டர்களுக்கு கடந்த சில நாட்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இந்த தட்டுப்பாடு அதிக அளவில் காணப்படுகிறது. பொதுவாக, சிலிண்டர்களை புக் செய்தால் ஓரிரு தினங்களில் வந்துவிடும். ஆனால், தற்போது புக் செய்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் சிலிண்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த திடீர் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, புதுச்சேரி ஆகியவற்றில் இருந்து சிலிண்டர்கள் வரவழைக்கப்படுகின்றன. அதேபோல, செங்கல்பட்டு, ஈரோடு, மயிலாடுதுறை, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆலைகளில் இருந்தும் புதிய சிலிண்டர்கள் கொண்டு வரப்படுகின்றன. லாரிக்கு 366 சிலிண்டர்கள் வீதம் தினமும் 100 லாரிகளில் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டு சென்னையில் இறங்கி வருகின்றன. இதனால் சில தினங்களுக்குள் சிலிண்டர் தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.