காசோலை கொடுத்து ஏமாற்றிய வழக்கில் மறைந்த நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரீத்தீஷ் மனைவிக்கு 60 லட்சம் ரூபாய் அபராதமும், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும் வழங்கி காரைக்குடி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
தனக்கென்று பெரிய ஆதரவாளர் கூட்டத்துடன், சென்னையில் திரைப்படத் தொழிலாளர்களுக்கும் ராமநாதபுர மாவட்ட மக்களுக்கும் நிதி உதவிகள் செய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ரித்தீஷ், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் சிபாரிசில் தி.மு.க-வில் இணைந்து… உடனே தேர்தலில் சீட் பெற்று எம்.பி-யாக வெற்றிபெற்றார்.
அடுத்த தேர்தலில் மீண்டும் வாய்ப்பளிக்காததால், அ.தி.மு.க-வில் இணைந்து செயல்பட்டுவந்தார். இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜே.கே.ரித்தீஷ் திடீரென்று மரணமடைந்தார். அதன் பின்பு அவருடைய சொத்துகள், பணத்தை அவருடன் இருந்த சிலர் ஏமாற்றி அபகரித்துக்கொண்டதாகச் சொல்லப்பட்டது. இது குறித்து அவர் மனைவி ஜோதீஸ்வரி அப்போது புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி விரைவு நீதிமன்றம் ஜே.கே.ரித்தீஷ் மனைவி ஜோதீஸ்வரிக்கு எதிராக தீர்ப்பளித்திருக்கிறது.
2019-ம் ஆண்டில் காரைக்குடியிலுள்ள திருசெல்வம் என்பவரின் நகைப் பட்டறையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை ஜோதீஸ்வரி வாங்கியிருக்கிறார்.
திருசெல்வம் ஏற்கெனவே ரித்தீஷ் குடும்பத்துக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால், இரண்டு மாதங்கள் கழித்துப் பணம் தருவதாக ஜோதீஸ்வரி கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல, இரண்டு மாதங்கள் கழித்து நகைக்கான தொகை ரூ.60 லட்சத்தை காசோலையாக திருசெல்வத்திடம் கொடுத்திருக்கிறார்.
ஆனால், ஜோதீஸ்வரியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பியிருக்கிறது. தான் ஏமாற்றப்பட்டதாக 2020-ம் ஆண்டு காரைக்குடி விரைவு நீதிமன்றத்தில் திருசெல்வம் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி ஜெயபிரதா, காசோலை கொடுத்து மோசடி செய்த ஜோதீஸ்வரிக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும், ஒரு மாதத்தில் பணத்தைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனத் தீர்ப்பளித்தார்.