டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.
அதன்படி தனிநபர் அதிகாரப்பூர்வ கணக்குக்கு நீள நிறமும், வணிக கணக்குகளுக்கு தங்க நிறமும், அரசு சார்ந்த கணக்குகளுக்கு க்ரே நிறமும் என டிக்குகள் மாற்றப்பட்டது. இதன் பின்னர் சந்தா செலுத்தி பல்வேறு வசதிகள் மற்றும் அம்சங்களுடன் கூடிய ட்விட்டர் ப்ளூ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், ட்விட்டரில் செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையில் ட்விட்டர் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இதனால் பயனாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதில் இருந்து, இதனை லாபகரமாக மாற்றுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.