திரைப்பட மானிய தேர்வு குழுவை வெளிப்படையாக அறிவிப்பதா?: முன்னாள் தலைவர் கேயார் கேள்வி

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழக அரசு 7 லட்சம் ரூபாய் மானியம் வழங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இப்போது மானியம் பெறத் தகுதியான படங்களை தேர்வு செய்ய தேர்வு குழு ஒன்றை அரசு அமைத்து அதனை தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. தேர்வு குழுவை வெளிப்படையாக அறிவிப்பது பலவித தவறுகளுக்கு வழிவகுக்கும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை வெளிவந்த தமிழ் படங்களில் சிறந்த படம், சிறந்த நடிகர் நடிகைகள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 10 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவையும், அதே காலகட்டத்தில் வெளியான படங்களில் மானியம் பெற தகுதியான சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் 14 பேர் அடங்கிய ஒரு குழுவையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேசமயம் அரசு அறிவித்துள்ள இரண்டு குழுக்களிலும் யார் தலைவர் மற்றும் உறுப்பினராக இருக்கிறார்கள் என்பதை எப்போதுமே ரகசியமாக வைத்திருப்பதுதான் மரபு. விருது மற்றும் மானியத்திற்கு உரியவர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்போதுதான் அதை தேர்வு செய்தவர்கள் யார் என்பதே தெரியவரும். தேசிய திரைப்பட விருது தேர்வு குழு மற்றும் சர்வதேச திரைப்பட விருது தேர்வு குழுக்களில் நான் தலைவர் மட்டும் உறுப்பினராக பங்கேற்ற அனுபவத்தில் இதை குறிப்பிடுகிறேன்.

ஆனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இரண்டு தேர்வுக் குழுவிலும் இடம் பெற்றிருக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெயர்களை சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். இது விளம்பரபடுத்துவதற்கான அறிக்கை அல்ல. உறுப்பினர்கள் மூலம் அந்த செய்தி பல வாட்ஸ் அப் குரூப் களிலும் பகிரப்பட்டு சோசியல் மீடியாக்கள் வரை வந்துவிட்டது. இது மிகவும் தவறான முன்னுதாரணம்.

ஏனென்றால் ஒவ்வொரு நடிகருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தங்களுக்கும் தங்கள் படங்களுக்கும் விருது கிடைக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். அத்துடன் ஒரு படத்திற்கு அரசாங்கம் 7 லட்சம் மானியமாக வழங்குவதால் அந்த தொகையை பெற வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயமாக இருக்கும். இதனால் சிலர் சம்பந்தப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டு ஆதிக்கம் செலுத்தவோ நிர்பந்தப்படுத்தவோ அல்லது வேறு வழிகளில் முயற்சி செய்யவோ வாய்ப்பு இருக்கிறது. ஒரு சிலர் இதை தவறாக பயன்படுத்தி தயாரிப்பாளர்களை ஏமாற்றவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இப்படி ஒரு சூழல் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது. ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் நலனுக்காக இன்னும் மூன்று ஆண்டுகள் நீங்கள் செயல்பட வேண்டி இருப்பதால். அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று சங்க நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கேயார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.