தி கேரளா ஸ்டோரி.. "நல்ல திரைப்படம்".. அப்போ குஜராத் ஸ்டோரி.. "யார் அது ஐஎஸ்ஐ ஏஜெண்ட்டா".. சீறிய எச். ராஜா

சென்னை:
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை அருமையான திரைப்படம் எனக் கூறிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, இந்து பெண்களும், கிறிஸ்தவப் பெண்களும் கண்டிப்பாக இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் எனக் கூறினார். அப்போது, குஜராத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் மாயமான விவகாரம் குறித்து நிருபர் கேள்வி கேட்டதால் எச். ராஜா ஆவேசம் அடைந்தார்.

பாலிவுட் இயக்குநர் சுதிப்தா சென் இயக்கத்தில் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திரைப்படம் வருவதற்கு முன்பு அதன் டீஸரே பெரும் புயலை கிளப்பியது. முஸ்லிம்களுக்கு எதிராக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதாக கூறி கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.

கேரளாவில் ஆயிரக்கணக்கான இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் மயக்கி திருமணம் செய்து, அவர்கள் மதம் மாற்றி ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து வருகின்றனர் என்பதே தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் மையக்கரு. ஆனால், இதுபோன்ற எந்த சம்பவமும் கேரளாவில் நடைபெறவில்லை என்றும், முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்புவதற்காகவே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதாகவும் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எச். ராஜா:
இதனிடையே, இந்த திரைப்படத்துக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதால் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் ரீலிஸ் ஆகியுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:

தகுதியற்ற முதல்வர்:
ஒவ்வொரு இந்து பெண் குழந்தையும், கிறிஸ்தவ பெண் குழந்தையும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. உலகில் நடக்காத எந்த விஷயத்தையும் இந்த திரைப்படத்தில் சொல்லவில்லை. இந்த திரைப்படத்தில் இருக்கும் அனைத்தும் சத்தியமான உண்மை. இதில் எள்ளுமுனை அளவு கூட பொய்யான விஷயங்கள் இடம்பெறவில்லை. ஆனால், இந்த திரைப்படத்தை தமிழக முதல்வரும், டிஜிபி சைலேந்திர பாபுவும் தடுத்து வருகின்றனர். இதுபோல நாட்டுக்கு செய்யும் துரோகம் வேறு ஒன்றுமில்லை. தகுதியற்ற முதல்வரும், தகுதியற்ற டிஜிபியும் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

முதல்வருக்கு தேசப்பற்று இல்லை:
இந்த திரைப்படம் ஒரு படிப்பினை. ஒவ்வொரு பெண் குழந்தையும் தாங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறோம் என்பதை இந்த திரைப்படத்தை பார்த்து உணர வேண்டும். இந்த உணர்வு டிஜிபிக்கும் வேண்டும். முதல்வருக்கும் வேண்டும். இந்த திரைப்படத்துக்கு மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் வரிவிலக்கு கொடுத்து இருக்கிறார்கள். அங்கு தேசப்பற்று மிக்கவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். ஆனால், தமிழக முதல்வருக்கும், டிஜிபிக்கும் தேசப்பற்று இல்லை. இவ்வாறு எச். ராஜா கூறினார்.

ஐஎஸ்ஐ ஏஜெண்ட்டா..
அப்போது குறுக்கிட்ட நிருபர் ஒருவர், “குஜராத்தில் 5 ஆண்டுகளில் 40 ஆயிரம் பெண்கள் மாயமாகி இருப்பதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தில் கூறப்பட்டுள்ளது.. அதை பற்றி என்ன சொல்கிறீர்கள்” எனக் கேள்வியெழுப்பினார். இந்த கேள்வியால் ஆவேசம் அடைந்த எச். ராஜா, “இங்கு என்ன விஷயத்துக்காக வந்திருக்கிறோம். அதை பேசுங்க.. வெட்கமே இல்லாமல் வேறு எதையோ பற்றி பேசிட்டு இருக்கீங்க.. நீங்க ஐஎஸ்ஐ ஏஜெண்ட்டா” என திருப்பிக் கேட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.