ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெறுவதற்கு காரணமாக இருந்த முக்கிய மைல்கல் திரைப்படங்களுள் ஒன்று ‘நல்லவனுக்கு நல்லவன்’.
ரஜினியை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக முன்னிறுத்தியதில் பெரும்பங்கு வகித்த எஸ்.பி.முத்துராமன் இந்தப் படத்தை இயக்கினார். ஆக்ஷன் காட்சிகளைத் தாண்டி ரஜினி மற்றும் ராதிகாவின் நடிப்பும் இதில் வெகுவாக பாராட்டப்பட்டது. இளையராஜாவின் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன.
ஏ.எவி.எம் நிறுவனத்திற்கு பல வெற்றித் திரைப்படங்களை இயக்கித் தந்தவரான ஏ.சி. திருலோகச்சந்தர், 1983-ல் தெலுங்கில் வெளியான ‘தர்மாத்முடு’ என்கிற படத்தைப் பார்த்தார். இதை ரஜினியை வைத்து தமிழில் ரீமேக் செய்தால் படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று தோன்றவே எம்.சரவணனிடம் அதைப் பற்றி சொன்னார். படத்தைப் பார்த்த சரவணனுக்கு ஒப்புதல் இல்லை.
ஏவிஎம் தயாரிப்பில், சிவாஜியின் நடிப்பில் ஏற்கெனவே வெளியாகியிருந்த ‘ஹிட்லர் உமாநாத்’ என்கிற படத்தின் கதையமைப்பை அந்தத் தெலுங்குத் திரைப்படம் ஏறத்தாழ அப்படியே கொண்டிருந்தது. மகேந்திரனின் கதை மற்றும் மௌலியின் திரைக்கதையில் உருவாகியிருந்தாலும் ‘ஹிட்லர் உமாநாத்’ ஒரு தோல்விப்படம். அதே கதையமைப்பைக் கொண்ட தெலுங்குப் படத்தை தமிழில் ரீமேக் செய்தால் சரியாக வருமா என்கிற சந்தேகம் அவருக்கு எழுந்தது. பஞ்சு அருணாச்சலத்தின் ஆலோசனை கேட்கப்பட, அவரும் ‘இது சரி வராது’ என்று சொல்லி விட்டார்.
ஆனால் சரவணனுக்குள் ஏதோவொரு பட்சி நிச்சயமாக சொல்லியது. தெலுங்கு படத்தில் மாற்றங்கள் செய்தால் தமிழில் வெற்றியடையும் என்று. விசுவைக் கூப்பிட்டு தெலுங்கு படத்தைப் பார்க்கச் சொல்லி அவருடைய ஆலோசனையையும் கேட்க “ஆம். ரஜினிக்கேற்றபடி திரைக்கதையில் மாற்றங்கள் செய்தால் நிச்சயம் வெற்றி” என்று சரவணனின் எண்ணத்தை அப்படியே பிரதிபலித்ததால் விசு திரைக்கதை எழுத படம் வெளியாகி வணிக வெற்றியைப் பெற்றது. ரஜினியின் நடிப்புப் பயணத்தில் ‘நல்லவனுக்கு நல்லவன்’ ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றது.
ரவுடி – பணக்காரன் – இரு வேடங்களில் அசத்திய ரஜினி
மாணிக்கம் ஒரு ரவுடியாக இருந்தாலும் ஹீரோவின் வழக்கப்படி மக்களுக்கு நல்லது செய்கிறான். அவனிடம் அடைக்கலம் தேடி வருகிறாள் ஓர் இளம்பெண். சொத்துக்கு ஆசைப்பட்டு அவளுக்கு வலுக்கட்டாய திருமணம் நடைபெறவிருக்கிறது என்பதையும் அங்கிருந்து தப்பித்துத்தான் வந்திருக்கிறாள் என்பதையும் அறிந்து கொள்ளும் மாணிக்கம், அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறான். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். மாணிக்கத்தைத் திருத்தி நல்வழிப்படுத்துகிறாள் அந்தப் பெண்.
அதுவரை செய்த தவறுகளுக்காக தண்டனை பெற்று சிறை திரும்பும் மாணிக்கத்திற்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. அவனது நேர்மையைப் பாராட்டி ஒரு தொழிற்சாலையில் சேர்த்து விடுகிறார், காவல்துறை அதிகாரி. கடுமையாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் உழைக்கும் மாணிக்கத்தின் பெயரில் தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் எழுதி வைத்து விட்டு முதலாளி இறந்து விடுகிறார். பணத்தை கண்டபடியாக செலவு செய்து வந்த முதலாளியின் குடும்ப உறவினர்கள் மாணிக்கத்தின் மீது கடுமையான பகை கொள்கிறார்கள்.
காலம் ஓடுகிறது. மாணிக்கம் இப்போது பழைய ரவுடி இல்லை. சமூகத்தில் அந்தஸ்து உள்ள செல்வந்தன். இனிமையான குடும்பம். கல்லூரிக்குச் செல்லும் மகள் யாரையோ காதலிப்பதை அறியும் மாணிக்கம் உற்சாகமாக அந்தக் காதலை ஆதரிக்கிறான். மாணிக்கத்தின் மனைவி எச்சரிப்பதையும் அவன் கண்டுகொள்வதில்லை. ஆனால் தன் மகள் காதலிப்பது யார் என்பதை அறியும் போது மாணிக்கத்திற்கு பெரிய அதிர்ச்சி. அது முதலாளியின் மகன். குடியும் கும்மாளமுமாக பொழுதைக் கழிப்பவன். மாணிக்கத்தைப் பழிவாங்குவதற்காகவும் சொத்துக்களை திரும்பப் பெறுவதற்காகவும் அவன் நடத்தும் காதல் நாடகம் இது. ஆனால் எத்தனை சொல்லியும் மகளுக்கு இது புரியவில்லை. வீட்டை விட்டு வெளியேறி காதலனை கை பிடிக்கிறாள்.
ஒருபக்கம் மகளைப் பிரிந்த சோகம், இன்னொரு பக்கம் பழிவாங்கும் படலம். மாணிக்கத்திற்குள் பழைய ரவுடி விழித்தெழிக்கிறான். பிறகு என்னவானது? பரபரப்பான கிளைமாக்ஸூடன் படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.
ரஜினிக்கு இணையான பாத்திரத்தில் அசத்திய ராதிகா
முன்னணி ஹீரோ நிலைக்கு உயர்ந்து விட்ட பிறகு வயதான பாத்திரத்தை ஏற்க பல நடிகர்கள் தயங்குவார்கள். ஆனால் ரஜினி அத்தகைய இமேஜ் பார்ப்பதில்லை. மகள் வயது ஹீரோயினுடன் ‘டூயட்’ பாடுகிறார் என்கிற புகார் அவர் மீது இருந்தாலும், ஆரம்பக் காலக்கட்டத்திலேயே வயது முதிர்ந்த பாத்திரங்களையும் அவர் ஏற்றிருக்கிறார். தனது ஸ்டைலான நடிப்பின் மூலம் வயது வித்தியாசத்தை சமன் செய்து விடுவார்.
இந்தப் படத்தின் முற்பாதியில் ரவுடியாக ஜூடோ ரத்னம் புண்ணியத்தில் ‘அபுஹாய்.. அபுஹாய்’ என்று ரஜினி செய்யும் ஆக்ஷன் காட்சிகள், கிளிஷேவாக இருந்தாலும் ரசிக்க வைக்கின்றன. ஆனால் சென்னையின் கொளுத்தும் வெயிலில் கூட ஏன் லெதர் ஜாக்கெட் போட்டு சுற்றுகிறார் என்று தெரியவில்லை. அது சினிமா ரவுடிகளின் யூனிபார்மா என்றும் தெரியவில்லை. சக ரவுடிகளை அடித்து உதைக்கும் போது ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் ரஜினி, ராதிகாவை வீட்டை விட்டு அப்புறப்படுத்துவதற்காக வெட்கத்துடன் தத்தளிக்கும் காட்சிகள் புன்னகைக்க வைக்கின்றன.
வயதாகி பணக்காரராக ஆகி விடும் போது ரஜினியிடமிருந்து முற்றிலும் வேறு மாதிரியான நடிப்பைப் பார்த்து ரசிக்க முடிகிறது. மகளுக்கு செல்லம் தரும் அன்புத் தகப்பன், வயதானாலும் மனைவியிடம் செய்யும் காதல் குறும்பு, மனைவி ஆட்சேபித்தாலும் மகளின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டும் உற்சாகம், அந்தக் காதலுக்கு உதவும் ஜாலியான திருட்டுத்தனங்கள், மனைவியிடம் பிடிபட்டு மாட்டிக் கொண்டு விழிப்பது என்று ‘little princess dad’ ஆக, ஒரு தகப்பனின் பாத்திரத்தை ஜாலியாக கையாண்டுள்ளார். தன்னை எதிர்த்து மகள் திருமணம் செய்து கொள்ளும் காட்சியிலும் மனைவி இறந்து போகிற காட்சியிலும் ரஜினியின் நடிப்பு உணர்ச்சிகரமாக இருந்தது.
கமர்ஷியல் படங்களில் நாயகனுக்கு நிகரான பாத்திரம் நாயகிக்கு தரப்படுவது அதிசயம்தான். எஸ்.பி.முத்துராமன் அதைச் சாதித்துள்ளார். ‘உமா’ என்கிற பெயரை பிரதான பாத்திரத்திற்கு சூட்டுவது விசுவின் வழக்கம். தனது பாத்திரத்தை ராதிகா மிகத் திறமையாகக் கையாண்டுள்ளார். ரஜினியின் வீட்டில் அடைக்கலம் புகுந்து வெளியேற மறுக்கும் காட்சியில் வெளிப்படும் குறும்பு, மகளுக்கு மிகையாக செல்லம் கொடுக்கப்படும் போது ஒரு தாயாக காட்டும் கண்டிப்பு, திருமணத்தில் தன் கணவன் அவமானப்படும் போது மகளை நோக்கி எரிமலையாக மாறும் கோபம் என்று பல காட்சிகளில் ராதிகாவின் ராஜாங்கம் கொடி கட்டிப் பறக்கிறது.
அந்தக் காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் நாயகனாக கார்த்திக் இருந்தார். ரஜினியை எதிர்த்து வில்லன் போன்ற பாத்திரத்தில் நடிக்க அவருக்குள் தயக்கம் எழுந்தது. இதே பாத்திரத்தில் தன்னை முத்திரை குத்தி விடுவார்களோ என்கிற பயம் அவருக்கு. ‘ஏவிஎம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைப்போம்’ என்று சரவணன் தந்த வாக்குறுதியின் பேரில் நடித்தார்.
ஆனால் கார்த்திக் பயந்தது நியாயமான விஷயமே. திருமணக் காட்சியில் ரஜினியின் கழுத்தைப் பிடித்துத் தள்ளும் போது ரஜினி ரசிகர்கள் கார்த்திக்கை கன்னாபின்னாவென்று திட்டித் தீர்த்தார்கள். ரஜினி – ராதிகாவின் பாசமிகு மகளாக துளசி இளமை பொங்க நடித்திருந்தார்.
‘தக்காளி’ என்கிற பாத்திரத்தில் ‘கிழிஞ்சது லம்பாடி லுங்கி’ என்று அடிக்கடி வசனம் பேசும் தத்துப் பித்தென்ற நகைச்சுவைப் பாத்திரத்தில் வந்து போனார் ஒய்.ஜி. மகேந்திரன். நேர்மையான காவல் அதிகாரியாக மேஜர் சுந்தர்ராஜன், வில்லனாக வி.கே.ராமசாமி, முதலாளியாக கௌரவப் பாத்திரத்தில் விசு ஆகியோர் நடித்தார்கள். ரஜினியை இண்டர்வியூ செய்யும் காட்சியில் “கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டார் ஆன நடிகரை உனக்குத் தெரியுமா?’ என்று முதலாளி விசு கேட்க “தெரியாது சார்” என்று ரஜினி சொல்லும் காட்சி சுவாரசியமானது. விசுவின் திரைக்கதையும் அவருடைய பாணியில் அமைந்த வசனங்களும் படத்திற்கு கூடுதல் சுவாரசியத்தை அளித்தன.
சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு – மனதை உருக வைத்த ராஜாவின் பாடல்
‘தொட்டதெல்லாம் துலங்கும்’ என்பது போல எண்பதுகளில் இளையராஜா போடும் அத்தனை பாட்டுக்களும் ‘ஹிட்’ ஆகின. இந்தப் படத்தின் வெற்றிக்கு ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் உறுதுணையாக இருந்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ரஜினி படம் என்றால் எஸ்.பி.பி.யின் குரல் ஒலிப்பதுதான் வழக்கம். ஆனால் இதில் யேசுதாஸிற்கு அதிகமான பாடல் தரப்பட்டிருந்தது. ‘சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு’, ‘உன்னைத்தானே’ ஆகிய இரண்டு சோகப்பாடல்களுக்கு யேசுதாஸ் சரி. ஆனால் `வெச்சிக்கவா உன்னை மட்டும்’ என்கிற குத்துப்பாடலையும் ரகளையாகப் பாடி ஆச்சரியப்படுத்தினார் யேசுதாஸ்… இந்தப் பாடலின் காட்சியில் ரஜினியோடு கல்பனா ஐயர் என்கிற இந்தி நடிகை நடனமாடியிருந்தார். பின்னணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளை வைத்து அதில் நடனக்காட்சி தெரியுமாறு ஷாட் வைத்து ஆச்சரியப்படுத்தினார்கள். தங்களை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட பெற்றோர்கள் அனைவரையும் ‘சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு’ பாடல் மனம் கலங்க வைக்கும். அத்தனை சிறப்பான வரிகள்.
‘உன்னைத்தானே’ பாடலில் மஞ்சுளா என்கிற கன்னடப் பாடகியை அறிமுகப்படுத்தினார் ராஜா. ‘முத்தாடுதே..’ என்கிற அட்டகாசமான பாடலை எஸ்.பி.பியும் ஜானகியும் பாடினார்கள். ‘நம்ம முதலாளி’ என்கிற அட்டகாசமான குத்துப் பாடலை ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா’ பாணியில் எஸ்.பி.பியும் மலேசியா வாசுதேவனும் பாடினார்கள்.
‘பாட்சாவின் முன்னோடியா, நல்லவனுக்கு நல்லவன்?’
இந்தப் படத்தில் வரும் சில காட்சிகளைப் பார்த்தால், ‘பாட்சா’ திரைப்படத்தின் சாயல் நிறைய இடங்களில் தெரிகிறது. மாணிக்கம் என்கிற ஹீரோவின் பெயரையே முதல் தடயமாகச் சொல்லலாம். மாணிக்கம் முதலில் ரவுடியாகவும் பிற்பாதியில் செல்வந்தனாகவும் இருக்கிறான். கொட்டும் மழையில் வில்லன்களிடம் அடிவாங்கி விட்டு பிறகு பல மடங்கு திருப்பியளிக்கிறான். கிளைமாக்ஸில் நடந்து வரும் ஒரு காட்சியில் பழைய ரஜினியும் புது ரஜினியும் மாற்றி மாற்றிக் காட்டப்படுகிறார்கள். மாணிக்கம் ஆட்டோ மட்டும்தான் ஓட்டவில்லை. மற்றபடி சில இடங்களில் பாட்சாவின் வாசனை அப்பட்டமாக வருகிறது.
ரஜினியை மசாலாப்படங்களில் உபயோகித்தாலும் அவரிடமுள்ள நடிப்புத் திறமையை வெளிக்கொணரும் வகையில் பாத்திரங்களையும் காட்சிகளையும் ஏற்படுத்துவதில் எஸ்.பி.முத்துராமன் வல்லவர். பெற்ற மகளின் பிரிவுத் துயர், அவமதிப்பு, தியாகம் போன்ற உணர்வுகளை ஒரு தகப்பனாக இந்தப் படத்தில் ரஜினி சிறப்பாக வெளிப்படுத்தினார். ராதிகாவின் நடிப்புத் திறமையும் இதில் இணைந்ததால் சம்பந்தப்பட்ட காட்சிகள் யதார்த்தத்திற்கு நெருக்கமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தன.
அந்தக் காலக்கட்டத்தில், டிவிஎஸ் கம்பெனியில் நடந்த வேலை நிறுத்தச் சம்பவத்தை படத்தில் பயன்படுத்தியிருந்தார். ஏவிஎம் நிறுவனத்திலும் அப்படியொரு வேலை நிறுத்தம் நடந்ததையும் எஸ்.பி.முத்துராமனின் முயற்சியில் அந்த வேலை நிறுத்தப் பிரச்சினை சுமூகமாக முடிந்ததையும் இயக்குநர் பகிர்ந்திருக்கிறார். ‘முதலாளியிடம் கனிவாகப் பேசி தொழிலாளர்கள் தங்களின் பிரச்சினையை பேசிக் கொள்ள வேண்டும். ஒழிக கோஷம் போடக்கூடாது. சிவப்புக் கொடி பிடிக்கக்கூடாது’ என்றெல்லாம் இது சம்பந்தப்பட்ட காட்சிகளில் சித்தரிக்கப்படுகிறது. ஒருவகையில் இது உண்மைதான். ஆனால் உலகமெங்கிலும் தொழிலாளர்கள் தங்களின் உரிமைக்காக போராடிப் பெற்றது நீண்ட வரலாறு. ‘அநியாயமான முதலாளிகளுக்குத்தான் அது பொருந்தும், நம் முதலாளி நல்லவர்’ என்றொரு வசனத்தை இணைத்து இதை நியாயப்படுத்தியிருக்கிறார்கள்.
ரவுடியாகவும் பணக்காரராகவும் ஒரு தகப்பனாகவும் ரஜினி தந்திருக்கும் மாறுபட்ட நடிப்பு, அவருக்கு இணையாக நடித்து அசத்தியிருக்கும் ராதிகாவின் பங்களிப்பு, சுவாரசியமான திரைக்கதை, இளையராஜாவின் பாடல்கள், எஸ்.பி.முத்துராமனின் திறமையான இயக்கம் போன்ற காரணங்களால் இன்றும் கூட பார்த்து ரசிக்கும் அளவிற்கு இருக்கிறது ‘நல்லவனுக்கு நல்லவன்’.