நான்கு மாவட்டத்தில் 169 பேர் குண்டர் சட்டத்தில் கைது.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் தென்மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது:-
“நடப்பாண்டில் இதுவரைக்கும் 169 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் 44 பேரும், தென்காசியில் 33 பேரும், தூத்துக்குடியில் 65 பேரும், கன்னியாகுமரியில் 27 பேர் என்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், திருநெல்வேலி மாவட்டத்தில் 603 ரவுடிகள், தென்காசியில் 299, தூத்துக்குடியில் 800, குமரியில் 554 என மொத்தம் 2256 ரவுடிகள் மீது நிர்வாகத்துறை நடுவர் மூலம் நன்னடத்தைப் பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது.
மேலும், திருநெல்வேலி சரகத்தில் 3,298 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் போடப்பட்டுள்ளன. திருநெல்வேலி சரகத்தில் மட்டும் இந்த ஆண்டு, 123 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 270 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், 29 கஞ்சா வழக்குக் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டும் உள்ளனர்” என்றுத் தெரிவித்தார்.