திருவனந்தபுரம்: பெண் தோழியுடன் கணவர் ஸ்கூட்டரில் சென்ற விவரம் சாலை கண்காணிப்பு கேமரா மூலம் அம்பலமானது. இதையடுத்து தன்னைத் தாக்கியதாக கணவர் மீது போலீஸில் மனைவி புகார் கொடுத்துள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான ஒருவர், தனது தோழியுடன் ஸ்கூட்டரில் ஹெல்மெட் போடாமல் சென்றுள்ளார். தற்போது கேரளாவின் பெரும்பாலான நகரங்களில் சாலை கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அவர்கள் வீட்டுக்கே நோட்டீஸ் அனுப்பப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில் ஹெல்மெட் போடாமல் சென்ற அந்த பெண்ணின் கணவர் ஸ்கூட்டரில் செல்லும் படத்தை சாலை கண்காணிப்பு கேமரா எடுத்துள்ளது. இதையடுத்து ஹெல்மெட் போடாமல் பெண் தோழியுடன் சென்றவர் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சாலை கண்காணிப்புக் கேமரா எடுத்த படத்தையும் நோட்டீஸில் இணைத்து போக்குவரத்து போலீஸார் அனுப்பியுள்ளனர்.
அந்த ஸ்கூட்டர் அவரது மனைவிக்குச் சொந்தமானது. வாகனம் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நோட்டீஸும், செல்போனில் அபராதம் தொடர்பான எஸ்எம்எஸ்-சும் அவரது மனைவிக்குச் சென்றுள்ளது.
இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது, அது யாரோ ஒரு பெண் என்றும், தனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவருக்கு லிஃப்ட் மட்டுமே கொடுத்ததாகவும் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் இதை நம்பாத அவரது மனைவி, கணவருடன் சண்டை போட்டுள்ளார். இருவருக்கும் சண்டை முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவியை, அந்தக் கணவர் தாக்கியதாகத் தெரிகிறது.
இதையடுத்து கணவர் மீது கரமணா போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி புகார் கொடுத்துள்ளார். தன்னையும், தனது 3 வயது குழந்தையையும் கணவர் தாக்கியதாக அதில் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றக் காவல்: இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.