வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரித்துள்ளதை கேள்வி பட்டு வருகிறோம். கணவன், மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் பலபேர் செல்போனில் மறைமுக உறவில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் மனைவியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்த கணவன் போக்குவரத்து போலீசாரால் சிக்கி சிறைக்கு அனுப்பப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த 32 வயதான அந்த நபர் கடந்த மாதம் 25 ஆம் தேதி இளம்பெண்ணுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. இந்த நிலையில் டிராஃபிக் சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா அவர்களை துல்லியமாக படம் பிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் சாலை விதிகளை மீறியவர்களை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது இந்த இருவரும் சிக்கியுள்ளனர். பின்னர் அவர்களது வண்டி எண்ணை கண்டறிந்து அதில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு அபராத தொகைக்கான செல்லான் மற்றும் சிசிடிவி எடுத்த புகைப்படமும் அனுப்பப்பட்டுள்ளது.
அங்குதான் பிரச்சினையே ஏற்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்டவர் ஓட்டிவந்த வண்டி அவரது மனைவி பெயரில் இருப்பதால் மொத்த விவரமும் மனைவியின் செல்போன் எண்ணுக்கு சென்றுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி கணவனிடம் அந்த பெண் யார் என்று கேட்டுள்ளார்.
அதற்கு கணவன், அந்த பெண் யாரென்று தெரியாது சாலையில் லிப்ட் கேட்டதால் உதவி செய்வேன் என்று கூறியுள்ளார். அதனை ஏற்க மறுத்த மனைவி கணவனுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது கைகலப்பாகியுள்ளது. பின்னர் அந்த பெண் கணவன் மீது கரமனா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன் பேரில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின்னர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வரும் நிலையில் பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கொள்வான் என்பதற்கு இதுதான் சாட்சி என்று கருத்து கூறி வருகின்றனர்.