கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரகரை தாலுகா மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்தவர் மருத்துவர் வந்தனா தாஸ் (23). இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட குற்றவாளி சந்தீப் (45) என்பவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பணியில் இருந்த மருத்துவர் வந்தனாவை கத்தரிக்கோல் பயன்படுத்தி பல முறை குத்தி உள்ளார்.
இதனை கண்ட போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து கட்டி வைத்தார். அப்போது சந்தீப் தாக்குதல் நடத்தியதில் 5 காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளம் பெண் மருத்துவரை திருவணந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர் வந்தனா பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. போதைக்கு அடிமையான குற்றவாளி சந்தீப் நெடும்பன் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஆவார். வீடு புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றவாளி ஆன சந்தீப்பை நேற்று முன்தினம் இரவு போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தரிக்கோலால் இளம் பெண் மருத்துவரை குத்தி கொலை செய்துள்ளனர். அவரது உடலில் 5 இடங்களில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என கூறி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவசர சிகச்சை பிரிவு தவிர அனைத்து பிரிவுகளும் வேலை நிறுத்ததை அறிவித்துள்ளது.