டெல்லி:
மாநில அரசியல் விவகாரங்களில் தலையிடுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு ஆட்சியமைத்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த போது இந்தக் கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது கட்சியை சேர்ந்த மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தினார். ஷிண்டேவுக்கு பெரும்பாலான சிவசேனா எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால், உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. பின்னர், பாஜகவுடன் கூட்டணி அமைத்த ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார்.
இதில் தான் தோல்வி அடைந்துவிடுவோம் எனத் தெரிந்துகொண்ட உத்தவ் தாக்கரே, முன்னதாகவே தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிரா முதல்வராக ஷிண்டே பதவியேற்றார். மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த ஆட்சி மாற்றத்துக்கு பின்னால் பாஜகவின் கை இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே சட்டத்துக்கு புறம்பாக ஆட்சியை கைப்பற்றியதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சில கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறுகையில், “மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசை ஏக்நாத் ஷிண்டே கவிழ்த்தது சட்டத்துக்கு புறம்பானது தான். அதே சமயத்தில், உத்தவ் தாக்கரே அவசரப்பட்டு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கக் கூடாது. அவ்வாறு அவர் செய்ததால், உத்தவ் தாக்கரேவுக்கு மீண்டும் முதல்வர் பதவியை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த விஷயத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் பி.எஸ். கோஷ்யாரி பல தவறுகளை செய்துள்ளார். நம்பிக்கை கோரும் தீர்மானத்தில், உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை இழந்ததாக ஆளுநர் கோஷ்யாரி கூறியது மிகப்பெரிய தவறு. கட்சிக்கு உள்ளே அல்லது வெளியே நடக்கும் பிரச்சினைகளுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தீர்வு காணக் கூடாது. அதேபோல, மாநில அரசியல் விவகாரங்களில் தலையிடுவதற்கும், முடிவெடுப்பதற்கும் ஆளுநருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் கொடுக்கவில்லை. உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால், அவர் மீண்டும் முதல்வராக ஆகி இருப்பார்” என அவர் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார்.