பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியதற்குட்பட்ட வரகு பாடி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி (29), ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த இவருக்குபிறவி யிலேயே இரண்டு கண்களும் பார்வை இல்லாத நிலையில் பார்வையற்றோர் பள்ளியிலேயே கல்வி பயின்று தமிழ்துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார. மேலும் சென்னை பச்சையப்பா கல்லூரியில் உயர் கல்வி பயின்ற காலத்தில் உமாசங்கர் என்ற மல்யுத்த பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று மல்யுத்தத்தில் தேர்ச்சி பெற்ற இவர், சர்வதேச மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்று வெண்கல பதக்கத்தையும், தேசிய அளவில் தங்க பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் மூன்று சகோதரிகளுடன் வறுமையான குடும்பத்தில் பிறந்த தனக்கு அரசுப்பணி வழங்க வேண்டுமென சென்னை நேரு ஸ்டேடியத்திற்கு கடந்த 2-ஆம் தேதி வந்திருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார் பாப்பாத்தி. மாற்றுதிறனாளி பெண்ணான பாப்பாத்தியின் மனுவை பரிசீலித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவருக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் பணி வழங்கிடுமாறு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து மல்யுத்தவீராங்கனை பாப்பாத்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ‘வெளி முகமை வாயிலாக அலுவலக உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாற்றுதிறனாளி பெண்ணான மல்யுத்தவீராங்கனை பாப்பாத்தியை தலைமை செயலகத்திற்கு அழைத்த மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுபபினர் மேகநாதரெட்டி ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் முன்னிலையில் செல்வி பாப்பாத்தியிடம் பணி நியமன ஆணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.