ராஜபாளையம்: ராஜபாளையம் நகரில் இரவு நேரங்களில் கையில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபடும் போதை இளைஞர்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ராஜபாளையத்தில் விவேகானந்தர் தெரு, அம்பலபுளி பஜார், பூபால் பட்டி தெரு, சுப்பிரமணியர் கோயில் தெரு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையான இளைஞர்கள் இரவு நேரங்களில் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மது போதையில் வீட்டின் முன் நிறுத்தி உள்ள வாகனங்களையும் சேதப்படுத்தி செல்கின்றனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை பொதுமக்கள் கண்டித்தாலோ அல்லது காவல் நிலையத்தில் புகார் அளித்தாலோ, வீடுகளின் கதவில் கற்களை எரிவது மற்றும் தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் விவேகானந்தர் தெருவில் உள்ள ஒரு வீட்டின் கதவை இரவு நேரத்தில் போதை இளைஞர்கள் தட்டும் காட்சிகள் வெளியாகின. இதுபோன்ற செயல்களால் ராஜபாளையம் நகரில் இரவு நேரங்களில் வெளியே வருவதற்கு பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜபாளைம் நகரில் இதேபோன்று இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மீண்டும் ராஜபாளையம் நகரில் இரவு நேரங்களில் சட்டவிரோத செயல்கள் நடக்க தொடங்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜபாளையத்தில் சட்டவிரோத போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தி, போலீஸார் இரவு நேர ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.