10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் டீசல் கார்களுக்கு தடையா? – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி,

வளிமண்டலத்தில் அதிக அளவில் கார்பன்-டை ஆக்சைடை வெளியிடும் நாடுகளில் உலக அளவில் 4-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. கார்பன்-டை ஆக்சைடு வெளியிடுவதை 2070-ம் ஆண்டுக்குள் பூஜ்யம் ஆக்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதற்கான வழிமுறைகள் குறித்து சிபாரிசு செய்வதற்காக பெட்ரோலியத்துறை முன்னாள் செயலாளர் தருண் கபூர் தலைமையில் எரிசக்தி மாறுதல் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது சிபாரிசுகளை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

டீசல் காருக்கு தடை

எரிசக்தி மாறுதல் குழுவின் முக்கிய சிபாரிசுகள் வருமாறு:-

கார்பன் வெளியேற்றத்தை குறைக்க டீசல் கார்கள் படிப்படியாக ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக, 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களிலும், அதிகமான மாசு கொண்ட நகரங்களிலும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கலாம். 2027-ம் ஆண்டுக்குள் இத்தடையை அமல்படுத்தலாம்.

டீசல் கார்களை மின்சார கார்களாகவும், சி.என்.ஜி. எரிவாயுவில் இயங்கும் கார்களாகவும் மாற்ற வேண்டும். அதுபோல், நகர்ப்புறங்களில் இன்னும் 10 ஆண்டுகளில் டீசலில் இயங்கும் நகர பஸ்களே இருக்கக்கூடாது.

பயணிகள் கார்களும், வாடகை கார்களும் பகுதி அளவுக்கு மின்சார கார்களாகவும், அதிகமான எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் கார்களாகவும் மாற்றப்பட வேண்டும்.

மோட்டார் சைக்கிள்கள்

உள்எரிப்பு என்ஜின்களை கொண்ட மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவை 2035-ம் ஆண்டுக்குள் படிப்படியாக ஒழிக்கப்பட வேண்டும். அவை மின்சார வாகனங்களாக மாறுவதுதான் உகந்த தீர்வாக இருக்கும்.

அப்படி மாறுவதற்கு முன்பு, இடைக்கால தீர்வாக, அதிக அளவில் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.

இவற்றின் மூலம், 2070-ம் ஆண்டுக்குள், கார்பன் வெளியேற்றத்தை பூஜ்யம் ஆக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய அரசு பதில்

இதுகுறித்து கேட்டபோது, பெட்ரோலியத்துறை அமைச்சகம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எரிசக்தி மாறுதல் குழுவின் சிபாரிசுகள், பல்வேறு அமைச்சகங்கள் தொடர்புடையவை. மாநிலங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. எல்லோருடனும் ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது. எனவே, அந்த சிபாரிசுகள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.