தெற்கு அந்தமான் கடல்பகுதிக்கு மே 14ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை “மோக்கா” புயலாக வலுப்பெற்று, போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு தென்மேற்கே நிலைகொண்டுள்ளது. இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும்.
அதன் பிறகு, நாளை காலை முதல் வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து மாலை மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு 13ஆம் தேதி மாலை வரை காற்றின் வேகம் படிப்படியாக மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 165 கிலோ மீட்டர் வரை உயர்ந்து, 14ஆம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும்.
இதனால், தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மோக்கா புயல் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மே 14ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கடலுக்கு சென்றுள்ள மீனவர்களும் விரைவாக கரை திரும்பவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.