புதுடில்லி, ஜாதி, மத, இன, மொழி அடையாளத்துடன் பெயர் வைத்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தங்கள் கட்சிக் கொடியில் மூவர்ண தேசியக் கொடியின் சாயலை கொண்டுள்ள அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கக் கோரிய மனு மீது, மத்திய அரசு தன் நிலைப்பாட்டை விளக்க, டில்லி உயர் நீதிமன்றம் நான்கு வார அவகாசம் அளித்து நேற்று உத்தரவிட்டது.
பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், கடந்த 2019ல் பொது நல மனு ஒன்றை டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதன் விபரம்:
நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் ஜாதி, மதம், இனம் மற்றும் மொழி அடையாளம் வரும்படியான பெயர்களை தங்கள் கட்சிகளுக்கு வைத்துள்ளன.
வெற்றி வாய்ப்பு
ஹிந்து சேனா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளை உதாரணமாக கூறலாம்.
அதேபோல, காங்கிரஸ் உட்பட சில அரசியல் கட்சிகளின் கொடி, நம் மூவர்ண தேசிய கொடியின் சாயலில் உள்ளன.
இது போன்ற செயல்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணானவை. இவை, தேர்தலின் போது வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
எனவே, இவை போன்ற பெயர்கள் மற்றும் கட்சி கொடிகளை மாற்றிட உத்தரவிட வேண்டும்.
மாற்றத் தவறினால், அக்கட்சியின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனு மீது தேர்தல் ஆணையம் அளித்த பதில்:
மத அடையாளங்களுடன் கூடிய பெயர்களை உடைய அரசியல் கட்சிகளை பதிவு செய்யக் கூடாது என, 2005க்கு பின் தேர்தல் கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதற்கு முன் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்ய முடியாது.
அவசியம் இல்லை
கொடியை பொறுத்தவரை, அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற விண்ணப்பிக்கும் போது, அக்கட்சி கொடியை சமர்ப்பிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
மேலும், ‘காங்கிரஸ் கட்சியின் கொடி பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதால், அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை’ என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு பதில் மனுவில் குறிப்பிடப்பட்டது.
இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு இன்னும் பதில் அளிக்காததை குறிப்பிட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிய வேண்டியது அவசியம்’ என, தெரிவித்தனர்.
மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, நான்கு வாரங்கள் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணை ஆக., 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்