2023 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று (10) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில், சிறப்பாக பந்து வீசிய மதீஷ பத்திரன 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணிக்கு இலகுவான வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
போட்டியின் 55ஆவது போட்டியில் நாணய சுழற்சியை வென்ற சென்னை அணி தலைவர் மகேந்திர சிங் தோனி முதலில் துடுப்பாட்டத்தை செய்ய தீர்மானித்தார். இதற்கமைய 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 8 விக்கெட்டுக்கு 167 ஓட்டங்கள் பெற்றது.
168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மதீஷ பத்திரன சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தி டெல்லி அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்டத்தின் 13ஆவது ஓவரின் கடைசி பந்தில் மணிஷ் பாண்டேவின் விக்கெட்டை மணிக்கு 149 கி.மீ வேகத்தில் வீசிய சிறந்த யார்க்கர் மூலம் மதீஷ் வீழ்த்தினார்.
நேற்றைய போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டதால், “DREAM11 GAMECHANGER OF THE MATCH” விருதையும் மதீஷ பெற்றார். 2023 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 8 போட்டிகளில் பங்கேற்றுள்ள மதீஷ பத்திரன சென்னை அணிக்காக 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.