புதுடில்லி: ‘ராணுவத்தின் பல் மருத்துவர் பிரிவுக்கான பணியிடங்களில், ஆண், பெண்களுக்கு என, தனி ஒதுக்கீடு முறை கைவிடப்படுகிறது. பணி நியமனத்தில் பாலின சமத்துவம் பின்பற்றப்படும்’ என, மத்திய அரசு அளித்த உறுதிமொழியை உச்ச நீதிமன்றம் ஏற்று தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த பல் மருத்துவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ராணுவத்தின் பல் மருத்துவர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக, 2021 ஜூலையில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதன்படி விண்ணப்பித்த தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த பல் மருத்துவர் கோபிகா நாயர் உட்பட சில பெண்கள் தேர்வு செய்யப்படவில்லை.
குறைந்த மதிப்பெண்
மொத்த பணியிடத்தில், 10 சதவீதம் மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், இந்தப் பணியிடத்துக்கு நடந்த தேர்வில், தங்களை விட குறைந்த மதிப்பெண் பெற்ற ஆண்களுக்கு அந்த இடம் கிடைத்ததாக, கோபிகா நாயர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், தேர்வு முடிவுகளை வெளியிட புதுடில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. கடந்த ஜன., 27ல் அந்த தடையை புதுடில்லி உயர் நீதிமன்றம் நீக்கியது.
இதை எதிர்த்து, கோபிகா நாயர் உட்பட சில பெண் மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த 8ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இது, உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுஉள்ளது.
இட ஒதுக்கீடு
வழக்கின் விசாரணையின் போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்டர்னி ஜெனரல் கே.எம்.நாகராஜ் வாதிட்டதாவது:
ராணுவத்தின் பல் மருத்துவர் பிரிவில் இனி பாலின பாகுபாடு இருக்காது. ஆண், பெண்ணுக்கு என, தனி இட ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் பல் மருத்துவர்கள் நியமிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து, தன் உத்தரவில் அமர்வு கூறியுள்ளதாவது:
ராணுவ பல் மருத்துவர் பிரிவுக்கான தேர்வுகளில் இனி ஆண், பெண் என, தனி ஒதுக்கீடு இருக்காது. பாலின சமத்துவம், சம வாய்ப்பு அளிக்கப்படும் என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்று, இந்த வழக்கு முடித்து கொள்ளப்படுகிறது.
சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வில், 27 பணியிடங்களில், பெண்களுக்கு என மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டன. தகுதியின் அடிப்படையில், மூன்று பெண்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் 11ம் தேதி நடந்த விசாரணையின்போது, ‘பெண்களுக்கு தனியாக ஒதுக்கீடு என்பது, கடிகாரத்தை பின்னோக்கி இயக்குவதாக உள்ளது.
தகுதிப் பட்டியலில், 235வது இடத்தில் உள்ள பெண்ணுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
அதே நேரத்தில், 2,394வது இடத்தில் உள்ள ஆணுக்கு வேலை கிடைப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்’ என, அமர்வு கேள்வி எழுப்பியிருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்