சென்னை: Farhana (ஃபர்ஹானா) ஃபர்ஹானா படத்துக்கு ஓமன், சிங்கப்பூர், மலேசியா, பக்ரைன் உள்ளிட்ட நாடுகளிலேயே பிரச்னை இல்லை என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்திருக்கிறார்.
மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஃபர்ஹானா’. இதில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
படத்துக்கு சிக்கல்: படமானது நாளை வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியான நாளில் இருந்து ஃபர்ஹானா படம் இஸ்லாமியர்களை புண்படுத்தும் நோக்கில் படமாக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பை முன்வைத்தனர். அப்படி எந்த காட்சியும் படத்தில் இல்லை என படக்குழு தொடர்ந்து தெரிவித்துவருகிறது. ஆனால், படத்தை வெளியிடக்கூடாது என்ற எதிர்ப்பும் ஒரு பக்கம் வலுத்துக்கொண்டே செல்கிறது.
தயாரிப்பாளர் அறிக்கை: இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல. நல்ல திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமே தவிர, ஒருநாளும் எந்த மத உணர்வுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிராகவே, புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல.
வெளிநாடுகளில் பிரச்னை இல்லை: குறிப்பிட்ட சில வெளிநாடுகளிலும் மத உணர்வுகள் புண்படுவது போன்ற காட்சிகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால், அந்த படம் தணிக்கையைத் தாண்டுவது மிகக் கடினம். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், ஓமன், பக்ரைன், ஐக்கிய அரபு நாடுகள், ஆகிய நாடுகளின் தணிக்கை விதிகள் கடுமையானதாக இருக்கும்.
வெளியீட்டுக்கு தயார்: ஆனால் மேற்குறிப்பிடப்பட்டு உள்ள அந்த நாடுகளிலேயே ஃபர்ஹானா திரைப்படம் எந்த வித சிக்கலும் இன்றி தணிக்கை செய்யப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. இதுவே ஃபர்ஹானா எந்த விதமான சர்ச்சையையும் உள்ளடக்காத படம் என்பதை தெளிவுபடுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
தி கேரளா ஸ்டோரிஸ்: இந்தியாவில் சமீபகாலமாக இஸ்லாமிய வெறுப்பை பரப்பும் வகையில் படங்கள் வருவது அதிகரித்திருக்கிறது. அந்த ஜானரில் வந்த தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. அதேபோல் சமீபத்தில் தி கேரளா ஸ்டோரிஸ் என்ற படம் வெளியானது. அது முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறுப்பு கருத்தை கொண்டிருந்தது. இதனையொட்டி அப்படம் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.