Huge Win For Delhi Government In Supreme Court In Fight vs Centre | மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: டில்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டில்லி அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ” மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் கையில் தான் உண்மையான நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டும் ” எனக்கூறியுள்ளது.

டில்லியில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. டில்லி நிர்வாக மாற்றம் தொடர்பாக மத்திய அரசு சில சட்ட திருத்தங்களை செய்தது.இதனை எதிர்த்து டில்லி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2019 ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷண் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால், வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

வழக்கில் 5 நீதிபதிகள் ஒரு மனதாக பிறப்பித்த உத்தரவு: ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கை என்பது நமது அரசியல்சாசனத்தின் அடிப்படை கூட்டமைப்பின் அங்கம். யூனியன் பிரதேசமான டில்லி கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு, அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படாதது தவறு. டில்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதை ஏற்க முடியாது. 2019 ல் நீதிபதி அசோக் பூஷன் அமர்வு வழங்கிய தீர்ப்பில் உடன்பாடில்லை.

மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே டில்லி சட்டசபைக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது.மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகார வரம்பிற்குள் அதிகாரிகள் இல்லையென்றால் அரசின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும். மக்களால் தேர்வான அரசுக்கு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படாதது தவறு.மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் கையில் தான் உண்மையான நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.