புதுடில்லி,”இந்தியா அமைதியை விரும்பும் நாடு. அதே நேரத்தில் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் அமைதிக்கு ஊறுவிளைவிக்க நினைப்போருக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்பதை உணர்த்தும் வகையிலேயே, 25 ஆண்டுக்கு முன் போக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
சோதனை
பா.ஜ.,வைச் சேர்ந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ராஜஸ்தானின் போக்ரானில், 1998, மே 11 – 13ம் தேதிகளில் அணுகுண்டு சோதனையை இந்தியா நடத்தியது.
இது உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மிக மிக ரகசியமாக நடந்த இந்த அணுகுண்டு சோதனையின் வெற்றிக்கு உதவியாக இருந்த விஞ்ஞானிகள் உள்ளிட்டோரை கவுரவிக்கும் வகையில், மே 11ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது.
போக்ரான் அணுகுண்டு சோதனையின், வெள்ளிவிழா ஆண்டையொட்டி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிஉள்ளதாவது:
அமைதி, அகிம்சையை வலியுறுத்தும் புத்தர், காந்தி பிறந்தது இந்த நாடு.
எப்போதும் இந்தியா அமைதியையே விரும்புகிறது.
இதுவரை எந்த ஒரு நாட்டின் மீதும் போர் தொடுத்ததில்லை, எந்த ஒரு நாட்டின் எல்லையையும் அபகரிக்க நினைத்ததில்லை.
அமைதி
இந்த உலகமே ஒரு குடும்பம், அகிம்சையே சிறந்த மதம் என்பது நம் நாட்டின் கோட்பாடுகளாகும். நம் நாட்டில் மட்டுமல்லாமல், உலகெங்கும் அமைதி நிலவுவதையே நாம் விரும்புகிறோம்.
அதே நேரத்தில், நம் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த நினைத்தால், தகுந்த பதிலடியைக் கொடுப்போம். இதை உணர்த்தும் வகையிலேயே, போக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்