சென்னை: சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ள இராவண கோட்டம் திரைப்படம் நாளை (மே 12) வெளியாகிறது.
விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.
இந்நிலையில், இராவண கோட்டம் திரைப்படம் குறிப்பிட்ட இனத்தை காயப்படுத்துவதாகக் கூறி சர்ச்சையானது.
இந்த சர்ச்சை குறித்து இராவண கோட்டம் படக்குழுவினர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளனர்.
இராவண கோட்டம் படக்குழு விளக்கம்:மதயானைக் கூட்டம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். முதல் படத்திலேயே திரையுலகில் அதிகம் கவனம் ஈர்த்த விக்ரம் சுகுமாரன், தற்போது இராவண கோட்டம் படத்தை இயக்கியுள்ளார். கண்ணன் ரவி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சாந்தனு பாக்யராஜ், கயல் ஆனந்தி, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நாளை (மே 12) வெளியாகும் இராவண கோட்டம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான இராவண கோட்டம் ட்ரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்தது. அதேநேரம், இந்தப் படம் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களை காயப்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ளது என சர்ச்சை கிளம்பியது.
1957ம் ஆண்டு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இராவண கோட்டம், கருவேலம் காட்டு அரசியலை பேசும் படமாக உருவாக்கியுள்ளது. ஆனால், இந்தப் படம் குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த மக்களை சாடியுள்ளதோடு, அவர்களை காயப்படுத்துவது போல் எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. மேலும், இராவண கோட்டம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.
இதனையடுத்து தயாரிப்பாளர் கண்ணன் ரவி இராவண கோட்டம் திரைப்படம் மீதான சர்ச்சை குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில், மண் சார்ந்த கதையை, மனிதத்தை அன்பை விதைக்கும் படைப்பாக மட்டுமே எங்கள் இராவண கோட்டம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடித்துள்ள இராவண கோட்டம், முழுக்க முழுக்க கற்பனையில் உருவானதாகும். இதில் இனம், மொழி சார்ந்து யாரையும் காயப்படுத்தும் காட்சிகள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், பத்திரிக்கையாளர்களுக்கான திரையிடலில் இராவண கோட்டம் படம் பார்த்த பத்திரிக்கையாளர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். மக்களின் ஒற்றுமையையும் அன்பையையும் போற்றும் இப்படத்தின் கருவை அனைவரும் பாராட்டியுள்ளனர். இராவண கோட்டம் படத்தில் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களை காயப்படுத்துவதாக எழுதியுள்ள வதந்திகள் முற்றிலும் பொய்யானது. இப்படம் யாரையும் எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை தயவுகூர்ந்து வதந்திகளை நம்பி, படத்திற்கு தடை கோருவதும், படத்தை தடுக்கும் நோக்கத்திலான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என படக்குழு சார்பாக கேட்டுக்கொள்வதாக அறிக்கையில் கூறியுள்ளார்.