Shinde government in Maharashtra… got away! | மஹாராஷ்டிராவில் ஷிண்டே அரசு… தப்பியது!

புதுடில்லி,: மஹாராஷ்டிராவில் நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்கொள்வதற்கு முன்பே, பதவியை ராஜினாமா செய்து விட்டதால், உத்தவ் தாக்கரேயை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த முடியாது’ என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதேநேரத்தில், எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்வது தொடர்பாக, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு அளிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்

மஹாராஷ்டிராவில், 2019ல் சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து, ‘மஹா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து, ஆட்சியை பிடித்தன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகித்தார்.

இந்நிலையில், 2022 ஜூனில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் வெளியேறி உத்தவ் தாக்கரேக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார்.

நோட்டீஸ்

இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தின் கீழ் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்களான, 16 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய, அப்போதைய துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வால் நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்கு பதிலடியாக, துணை சபாநாயகருக்கு எதிராக ஷிண்டே தரப்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அடுத்தடுத்து நடந்த பரபரப்பான அரசியல் திருப்பங்களால், கடந்தாண்டு ஜூனில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., கூட்டணி அரசு பதவியேற்றது.

இந்நிலையில், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்களான, 16 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஷிண்டேயும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடினார். வட கிழக்கு மாநில மான அருணாச்சல பிரதேசத்தில், 2016ல் அப்போதைய சபாநாயகர் நபம் ரெபியா வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

‘சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருக்கும்போது, அவர், எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது’ என, அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி, ஏக்நாத் ஷிண்டே தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோஹ்லி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு விபரம்:

சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு முன்பே, உத்தவ் தாக்கரே தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனால், அவரை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த முடியாது.

அதேநேரத்தில், உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை இழந்து விட்டார் என முடிவெடுப்பதற்கு, அப்போதைய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

இதுபோன்ற நிலையில், பெரும்பான் மையை நிருபிக்க கவர்னர் உத்தரவிட்டது தவறு.

எதிர்க்கட்சி தலைவரோ அல்லது சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யாத நிலையில், கவர்னரின் விருப்பத்துக்கு ஏற்ப சபாநாயகர் செயல்பட்டது, சட்டப்பூர்வமான செயல் அல்ல.

ஆனாலும், சட்டசபையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளவர் என்ற அடிப்படையில், ஏக்நாத் ஷிண்டேயை அரசு அமைக்க அழைத்ததாக, கவர்னர் தன் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்.

ஷிண்டே ஆதரவாளரை சிவசேனா கட்சியின் கொறடாவாக நியமித்த சபாநாயகரின் முடிவும் சட்டவிரோதமானது.

ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. இந்த விஷயத்தில் சபாநாயகர் குறித்த காலத்துக்குள் விசாரித்து, தன் முடிவை தெரிவிக்க வேண்டும்.

உட்கட்சி பிரச்னையை தீர்ப்பதற்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நடைமுறையை பின்பற்றுவது சரியான வழிமுறை அல்ல.

எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான நபம் ரெபியா வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்வது தொடர்பாக, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு அளிக்கும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

‘ராஜினாமா செய்ய வேண்டும்’

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:மஹாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அரசு அமைந்ததை எதிர்த்த வழக்கில், கவர்னராக இருந்த பகத்சிங் கோஷ்யாரியை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. எந்தவித ஆதாரமும் இல்லாமல், உத்தவ் தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்து விட்டது என்ற முடிவுக்கு கவர்னர் எப்படி வந்தார் என, நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்; இது, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இதற்கு தார்மீக பொறுப்பேற்று, ஏக்நாத் ஷிண்டே தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

‘தார்மீக கடமை எங்கே?’

மஹாராஷ்டிரா துணை முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது:ஏக்நாத் ஷிண்டேயை ராஜினாமா செய்யும்படி கூறுவதற்கு உத்தவ் தாக்கரேக்கு எந்த தகுதியும் இல்லை. கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து தான், சிவசேனா வெற்றி பெற்றது. ஆனால், தேர்தலுக்கு பின், முற்றிலும் கொள்கைக்கு முரணான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் அமர்ந்தார். அப்போது அவரது தார்மீக கடமை எங்கே சென்றது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.