கொல்லம், கேரளாவில், சிகிச்சை அளித்த பெண் டாக்டரை, கைதி ஒருவர் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், ஆசிரியராக பணிபுரிந்து வந்த சந்தீப் என்பவர் சமீபத்தில் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
தகராறு
மதுவுக்கு அடிமையான இவர், குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டார். இது குறித்து, சந்தீப் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
வீட்டில் ஏற்பட்ட தகராறின் போது காலில் காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக, கொல்லத்தில் உள்ள மருத்துவமனைக்கு சந்தீபை நேற்று காலை போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு, டாக்டர் வந்தனா தாஸ், 23, சிகிச்சை அளித்தார்.
அப்போது அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்த சந்தீப், டாக்டரையும், உடன் வந்த போலீசாரையும் தாக்கினார்.
படுகாயமடைந்த டாக்டர் வந்தனா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், ”இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்,” என, உறுதி அளித்துள்ளார்.
டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை பாதுகாக்க, கேரள அரசு தவறி விட்டதாக, காங்., – பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
இந்த சம்பவத்தை கண்டித்து, இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தின.
இந்த சம்பவம் தொடர்பாக, மாநில மனித உரிமை கமிஷன் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஏழு நாட்களுக்குள் கொல்லம் மாவட்ட எஸ்.பி., அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
தமிழகத்தில் கண்டனம்
கேரளாவில் பயிற்சி டாக்டர் வந்தனா தாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்த கருத்துக்கு, தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
சங்கத் தலைவர் செந்தில் கூறியதாவது:
இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் மீதும், பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணமானவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், ‘பயிற்சி டாக்டர் அனுபவமில்லாதவர். கொலையாளி தாக்கும்போது, அவர் அச்சத்தால் கீழே விழுந்து விட்டார்’ என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்; இது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரசின் தோல்வி: உயர் நீதிமன்றம்
பெண் டாக்டர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன், கவுசர் எடப்பகத் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு கூறியதாவது:பயிற்சி பெற்ற காவல் துறை, இளம் டாக்டரை பாதுகாக்கத் தவறி விட்டது. இது, ஒட்டு மொத்த காவல் துறை மற்றும் அரசின் தோல்வி. மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட நபர் அசாதாரணமாக நடந்து கொள்ளும் போதே, அவரை போலீசார் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். இந்த சம்பவம் டாக்டர்கள், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அமர்வு கூறியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்