ஆர்எஸ்எஸ் மீது காங்கிரஸ் அச்சம் கொண்டிருக்கிறது – அஷோக் கெலாட் கருத்துக்கு பாஜக பதிலடி

ஜெய்ப்பூர்: ஆர்எஸ்எஸ் மீது அச்சமும் வெறுப்பும் கொண்ட அரசியல் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது; இதன் காரணமாகவே, அது ஆர்எஸ்எஸ் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது என்று ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சி.பி. ஜோஷி தெரிவித்த்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில அரசியல் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி வியாழக்கிழமை கருத்து தெரிவித்த அசோக் கெலாட், “பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாசிஸ்ட்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அவர்கள் (பாஜக) மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் அரசைக் கவிழ்த்தார்கள். அதே நிலைமை எங்களுக்கும் நிகழ இருந்தது. இருந்தபோதிலும் எங்கள் அரசு தப்பி பிழைத்தது. அவர்களிடமிருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

அஷோக் கெலாட்டின் இந்த கருத்துக்கு ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சி.பி. ஜோஷி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்எஸ்எஸ் மீது அச்சமும் வெறுப்பும் கொண்ட அரசியல் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. இதன் காரணமாகவே, அது ஆர்எஸ்எஸ் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பரிவார் அமைப்புகளின் தொண்டர்கள் நாட்டிற்கான தங்களின் பங்களிப்பை மிகுந்த அர்ப்பணிப்புடன் எவ்வித பாகுபாடுமின்றி செய்துவருகிறார்கள். காங்கிரஸ் கட்சியோ ஒரு குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே பாடுபடக்கூடிய ஒரு சிதறுண்ட அமைப்பு. தீவிரவாதிகளை மதிப்பதும், தேச பக்தர்களை அவமதிப்பதும் தான் காங்கிரஸின் வீழ்ச்சிக்குக் காரணம்.

ராஜஸ்தான் முதல்வர் தன்னைத் தானே சுயபரிசோதனைக்குட்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால் அவரது கட்சிக்கார்களே அவரை பாசிஸிட் என்று கூறுகின்றனர். முதல்வர் தன்னை மேவாரின் காந்தி என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அவரது இந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலம் நாற்காலியை தக்க வைத்துக் கொள்வதிலேயே கடந்துவிட்டது. 2023ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் அவருக்கு வந்து விட்டது. அதனால் ராகுல் காந்தியின் கவனத்தை ஈர்க்க அவர் இவ்வாறெல்லாம் பேசி வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.