ஜப்பான் தேசிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரில் நேற்று (11) இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கையின் வளர்ந்து வரும் அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
டோக்கியோவில் உள்ள சனோ சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியை வென்ற ஜப்பான் அணி, வளர்ந்து வரும் இலங்கை அணியை முதலில் துடுப்பாட பணித்தது.
இதற்கமைய களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 125 ஓட்டங்கள் எடுத்தது.
இதனைதொடர்ந்து விளையாடிய ஜப்பான் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 57 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பந்துவீச்சில் இம்தியாஸ் ஸ்லாசா 05 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, லக்ஷான் மயே, டெலோன் பீரிஸ் மற்றும் ஹர்ஷன விக்ரமசிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்படி நேற்றைய வெற்றியின் மூலம் இலங்கையின் வளர்ந்து வரும் அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கின்றனர். இந்நிலையில் 3 அவது போட்டி நாளை (13) நடைபெறவுள்ளது.