கும்பகோணம்: கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழலை ஒழிக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழக முதல்வருக்குத் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டி.குருமூர்த்தி இந்த போராட்டத்துக்கு தலைமை வகித்தார்.
அவர்கள் அனுப்பிய தபாலில், ”அமைச்சர் பி.டி.ஆர், பழனிவேல்ராஜன் ஆடியோ குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும், தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர் செய்ய வேண்டும், இயற்கை வளம் கொள்ளை போவதைத் தடுக்க வேண்டும், டாஸ்மாக் கடையை மூட வேண்டும், தானியங்கி இயந்திரம் மூலம் நடைபெறும் மது விற்பனையைத் திரும்பப் பெற்று, பூரண மது விலக்கை அமல்படுத்திட வேண்டும்,
மதம் மாறியவர்களுக்கு, மத்திய அரசு சலுகையுடன் கூடிய சான்றிதழ் வழங்குவதாக அறிவித்ததைத் திரும்பப் பெற வேண்டும், தமிழகத்தில் நடைபெறும் ஊழல் குறித்து நடவடிக்கை மேற்கொண்டு, அதனை ஒழிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதே போல் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட 3 வட்டங்களில் அந்தந்த பகுதிதளிலுள்ள தபால் நிலையங்களில் 25 மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத் தலைவர் லோகசெல்வம், மாநகரத் தலைவர் பாலாஜி மற்றும் பலர் பங்கேற்றனர்.