உலகில் எல்லா உயிரினங்களுக்கும் முதன்மையான உறவு… அம்மா! தன் பிள்ளைகளையும் குடும்பத்தையும் உயிராக நேசித்து, அவர்களின் சுகத்தில் தன்னலம் மறக்கும் எல்லா அம்மாக்களுமே ‘சூப்பர் மாம்’தான்! அப்படியொரு சிறப்புக்குரிய அம்மாவின் கதைதான் சங்கீதாவுடையதும்.
ஒண்டுக்குடித்தன வீட்டில், நெடுங்காலமாக அகப்பட்டுக்கிடந்த இவரின் குடும்பம், இப்போதுதான் `சிங்கிள் பெட்ரூம்’ வீட்டுக்கு முன்னேறியிருக்கிறது. வீட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் இப்போதைய முன்னேற்றம், இந்தக் குடும்பத்துக்கு அடுத்தகட்ட நகர்வு. சென்னை, சூளைமேட்டில் இருக்கும் அந்த வீட்டுக்குச் சென்றதும், நமக்குள் தன்னம்பிக்கை குடிகொள்கிறது.
17 வயதில் திருமணம், 22 வயதில் இரண்டு பிள்ளைகள், அடுத்த சில ஆண்டுகளில் ‘சிங்கிள் பேரன்ட்’ அத்தியாயம், இளைப்பாற வாய்ப்பில்லாத நெருக்கடியான ஓட்டம்… வாழ்க்கைக்கான இந்தப் பந்தயத்தில், நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார் சங்கீதா. பிள்ளைகளின் நலனில் தன்னைக் கரைத்துக்கொண்ட சங்கீதாவை, அரவணைத்துத் தாங்குகின்றனர் இவரின் பிள்ளைகள். இவர்களின் கதை நமக்கு உணர்த்துகிறது, அன்பின் ஆழத்தை!
“என் பூர்வீகம் மன்னார்குடி பக்கத்துல சுந்தரக்கோட்டை கிராமம். எனக்கு ஒரு தங்கச்சி, ஒரு தம்பி. அஞ்சாவது வரைதான் படிச்சேன். படிப்புல நாட்டம் வரலை. அதனால, 17 வயசு வரைக்கும் வீடு மட்டும்தான் எனக்கான கூடு. என்னையே நான் சரிவர புரிஞ்சுக்காத குழந்தைப் பருவத்துலயே கல்யாணம் முடிஞ்சுடுச்சு.
பயமும் தயக்கமுமா அடியெடுத்து வெச்ச அந்த பந்தம், வெளியுலகத்தைப் புரிய வைக்கும்னு நம்பினேன். ஆனா, நினைச்சது ஒண்ணு; நடந்தது ஒண்ணு. ஆரம்பத்துல என்னவோ கல்யாண வாழ்க்கை நல்லாதான் போச்சு. ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல எங்களுக்குள்ளாற விரிசல் ஏற்பட ஆரம்பிச்சது. அவர் நிறமா இருப்பார். நான் கலர் கம்மிதான். ‘ஊர் நாட்டு’னு திட்டுவார். சகிச்சுகிட்டேன். ஏதேதோ காரணத்தால மனதளவுல எங்களுக்குள்ள விரிசல் அதிகமாகிட்டே இருந்துச்சு.
குடிப்பழக்கத்தால அவர் தன்னையே மறந்தார். பொழுது விடிஞ்சா பிரச்னைதான். உடல் ரீதியாவும் மன ரீதியாவும் அவரால அவ்ளோ காயப்பட்டேன். அவரை குணப்படுத்த நான் எடுக்காத முயற்சிகள் இல்லை. எதுக்குமே அவர் ஒத்துழைப்பு கொடுக்கலை. பெத்தவங்க வருத்தப்படுவாங்கன்னு நான் பட்ட கஷ்டத்தையெல்லாம் என் வீட்ல சொல்லாமலேயே இருந்தேன். பல நாள்கள் சண்டை, ஒருகட்டத்துல வீதிவரைக்கும் வந்துச்சு. மெனக்கெட்டு அவரை வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பினேன். அங்கயும் அவர் சரியா நடந்துக்கலை. பாதியிலேயே வீட்டுக்கு வந்துட்டார்.
அப்புறம், மறுபடியும் பழைய கதைதான். ‘என்னடா வாழ்க்கை’னு அழுகையும் புலம்பலுமா வாழ்க்கையே வெறுப்பாச்சு. என்னை நம்பி ரெண்டு பிள்ளைகள் இருந்தாங்க. அதனால, தப்பான முடிவெடுக்கக்கூட மனசு வரலை. கொஞ்சமும் பொறுப்பே இல்லாம, 2011-ல் வீட்டைவிட்டுப் போன மனுஷன்தான். இப்பவரைக்கும் அவர் எங்க இருக்கார்னே தெரியலை” – கசப்பான நினைவுகளைச் சொல்லும் சங்கீதாவின் விழிகளில் ஈரம் கசிகிறது.
கணவரின் தொந்தரவுகள் நின்றாலும், சிங்கிள் பேரன்ட் பொறுப்பால் சங்கீதாவுக்கு அழுத்தம் கூடியது. பொருளாதார நெருக்கடி, சமூகத்தின் ஏளனங்கள், எதிர்காலம் பற்றிய பயம் என இவரின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும் அனல் தகித்திருக்கிறது.
“கல்யாண வாழ்க்கை கசந்துபோனாலும், பலரும் பக்குவமா சிக்கல்லேருந்து வெளிய வந்துடுறாங்க. ஆனா, படிக்காதது மற்றும் வெளியுலகம் தெரியாததால, என்னால துணிச்சலா முடிவெடுக்க முடியலை. பெத்தவங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி, பிள்ளைகளையாச்சும் படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன்.
வீட்லயே மெழுகுவத்தி தயாரிச்சேன். நைட்டி தைச்சேன். ராத்திரி பகலா வேலை செஞ்சாலும் வருமானம் போதலை. உடல்நிலை சரியில்லாதவங்களை கவனிச்சுக்கிற வேலைக்கும் போனேன். ‘ஓடினேன்… ஓடினேன்… வாழ்க்கையின் எல்லைவரை ஓடினேன்’ங்கிற சினிமா டயலாக் மாதிரி, தொடர்ச்சியா நிறைய வேலைகளுக்குப் போனேன். அந்தச் சிரமங்களைவிடவும் சமூகம் கொடுத்த நெருக்கடிகள்தான் மனதளவுல என்னை ரொம்பவே பாதிச்சது.
சிங்கிள் பேரன்ட்டா இருக்கிறவங்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்கிறது லேசுபட்ட காரியமில்லை. பலரின் பார்வையும் பலவிதமா தாக்கும். இவ்வளவு கஷ்டத்தைத் தாண்டி நான் நம்பிக்கையோடு வாழ்றதுக்கு காரணமே என் பிள்ளைகள்தான். அதுலயும், என் பொண்ணு எனக்கு அம்மா மாதிரி. கலங்கிற நேரத்துலயெல்லாம் ‘நான் இருக்கேன்மா’னு என்னைக் கட்டிப்பிடிப்பா.
அக்கம்பக்கத்துல யாராச்சும் தப்பாவோ அல்லது கிண்டலாவோ பேசிடுவாங்களோன்னு பல வருஷங்களா நான் தலையில பூ வைக்காம, நல்லா டிரஸ் பண்ணிக்காம இருந்தேன். ‘நீ ஏன் மத்தவங்களுக்காக வாழுறே? அவங்களா உன்னைக் காப்பாத்தப் போறாங்க?’னு பலவிதத்துலயும் என்னைப் புதுப்பொலிவா மாத்தியிருக்கா என் பொண்ணு. மத்தவங்களோடு சகஜமா பேசிப் பழக சொல்லிக்கொடுத்தா. இங்கிலீஷும் கத்துக்கொடுக்கிறா. கடந்த சில வருஷமாதான் நல்லபடியா டிரஸ் பண்ணிக்கிறேன். தலைக்குப் பூ வைக்கிறேன்.
வேலைக்குப் போனதும் முதல் மாச சம்பளத்துல பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்தா. நான் தங்க நகை பயன்படுத்தி 20 வருஷங்களாச்சு. என் ஆசையைப் புரிஞ்சுக்கிட்டு, தங்கத்துல கம்மல் வாங்கிக் கொடுத்தா. காதவிட்டு கழட்டாம அந்தக் கம்மலை போட்டுகிட்டிருக்கேன். இதையெல்லாத்தையும்விட மனசு பூரிச்சுப்போன விஷயம், பிறந்தநாள் கொண்டாடினது.
வாழ்கையில முதன்முறையா, என் 40-வது பிறந்தநாள்லதான் கேக் வெட்டிக் கொண்டாடினேன். அந்த மகிழ்ச்சியில, என் மனசுல இருந்த பாதி பாரம் குறைஞ்சுடுச்சு”- மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் பெருக்கெடுக்க, அருகிலிருக்கும் தன் மகள் சிவயோகத்தைப் பார்த்து ஆசுவாசமாகிறார் சங்கீதா.
“சின்ன வயசுல இருட்டுன்னாலே எனக்கு பயம். ஏன்னா, அந்த நேரத்துலதான் எங்கப்பாவோட இன்னொரு முகம் இயல்பைவிட இன்னும் ஆக்ரோஷமா வெளிப்படும். ‘அம்மா இன்னைக்கு எவ்ளோ துன்பப்பட போறாங்களோ?’னு நானும் என் ஒவ்வொரு நாளையும் சந்தோஷமில்லாமதான் நகர்த்தினேன்.
‘ரெண்டு பிள்ளைகளையும் வெச்சுக்கிட்டு சென்னையில தனியா எப்படி வாழப்போறே?’ பலரும் அம்மாகிட்ட கேட்டாங்க. ‘என்னால முடியும். பிள்ளைகளுக்கு அப்பா ஞாபகமே வராதபடி என்னால நல்லா வளர்த்து ஆளாக்க முடியும்’னு வைராக்கியமா வாழ்ந்துகாட்டிய எங்கம்மா, சுயமரியாதையான வாழ்க்கையை எங்களுக்கும் கத்துக்கொடுத்தாங்க. இந்த நெருக்கடியான சூழல்ல, தாத்தா, பாட்டி, மாமானு பல சொந்தங்களும் எங்களுக்கு உறுதுணையா கூட நின்னாங்க.
‘படிப்புல மட்டும்தான் நம்மளவிட மேல இருக்கிறவங்களைப் பார்க்கணும். மத்த எல்லா விஷயத்துலயும் நம்மளவிட கீழ இருக்கிறவங்களை மட்டும்தான் பார்க்கணும்’னு எங்கம்மா சொல்லிச்சொல்லி வளர்த்தாங்க. எங்கப்பாவின் பாசம் கிடைக்காத ஏக்கமோ வருத்தமோ இல்லாத அளவுக்கு, அம்மாகிட்டேருந்து அளவுகடந்த அன்பு கிடைச்சது. குடும்ப சூழ்நிலையை உணர்ந்து நல்லா படிச்சேன்.
ப்ளஸ் டூ முடிச்சதும் காலேஜ் சேர பொருளாதார ரீதியா நிறைய சவால்கள். பல இடங்கள்லயும் ஸ்காலர்ஷிப் கேட்டு விண்ணப்பிச்சேன். சென்னையில இருக்கிற ‘டீம் எவரஸ்ட்’ அமைப்புல உதவி கிடைச்சது. பி.எஸ்ஸி முடிச்சதும், வேலைக்குப் போய்கிட்டே என் வருமானத்துல எம்.எஸ்ஸி படிச்சேன். ரெண்டு வருஷமா வேலைக்குப் போறேன். இப்போ சிலரின் படிப்புக்கு என்னாலான உதவியைச் செய்றேன்” என்று மகிழ்ச்சியுடன் சொல்லும் சிவயோகம், சென்னையிலுள்ள முன்னணி ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார்.
“ஒத்திக்கு இருக்கிற இந்த வீட்டுக்குக் குடிவந்து கொஞ்ச காலம்தான் ஆகுது. இதுக்காக, பர்சனல் லோன் போட்டிருக்கேன். சொந்த வீடு வாங்கி, அதுல அம்மாவைத் தங்க வைக்கணும். அதுக்கப்புறம்தான் என் தனிப்பட்ட சந்தோஷங்களை பத்தி யோசிக்கணும்!” தன் அம்மாவைப்போலவே வைராக்கியத்துடன் சொல்கிறார் சிவயோகம்.
“என் பையனும் பொண்ணும் சம்பாதிக்க ஆரம்பிச்சதும், ‘நீ கஷ்டப்பட்டது போதும். இனி உன்னையும் குடும்பத்தையும் நாங்க பார்த்துக்கிறோம்’னு சொன்னாங்க. உழைப்புதான் இத்தனை வருஷமா என்னை நம்பிக்கையோடு கூட்டிட்டு வந்திருக்கு. உடம்பும் மனசும் ஒத்துழைக்கிற வரைக்கும் வேலைக்குப் போறதுலதான் எனக்கு விருப்பம். அதனால, வீட்டு வேலைக்குப் போறேன்.
என் வாழ்க்கையிலேருந்து மத்தவங்களுக்கு நான் ஷேர் பண்ணிக்க நிறைய விஷயங்கள் இருக்கு. அதுல முக்கியமானது சிங்கிள் பேரன்ட் சவால். சிங்கிள் பேரன்ட்டா இருக்கோமேன்னு யாருமே வருத்தமோ, கவலையோ படாதீங்க. அப்படியான வலி மிகுந்த நேரத்துல, தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வளர்த்துக்கிறதுதான் முதல்ல நாம செய்ய வேண்டியது.
ஊர் உலகம் ஆயிரம் சொல்லும். அவங்கவங்க பார்வையிலேருந்து பலரும் சொல்றதுல சரி, தவறு ரெண்டுமே கலந்திருக்கலாம். ஆனா, நமக்கான வாழ்க்கை நம்ம விருப்பப்படிதான் இருக்கணும். திருடக் கூடாது. பொய் சொல்லக் கூடாது. யாரையும் ஏமாத்தக் கூடாது. இதையெல்லாம் தவிர்த்துட்டு செய்ற எந்த வேலைனாலும் அது புனிதமானதுதான். பாலின வேறுபாடின்றி எல்லாருக்குமான பெரிய சொத்தே கல்விதான். இது மட்டும் சரியாவும் தரமாவும் கிடைச்சுட்டா, வாழ்க்கையில எவ்ளோ பெரிய போராட்டம் வந்தாலும் நம்பிக்கையோடு நீந்தி கரைசேர்ந்துடலாம்” -மகளின் கைகளைப் பற்றிக்கொண்டு சொல்லும் சங்கீதாவின் பேச்சில் துளிர்க்கிறது பலருக்குமான தன்னம்பிக்கை!