ஆன்லைன் மூலம் ரூ.1.76 லட்சம் மோசடி செய்த இரண்டு வடமாநில இளைஞர்களை புதுச்சேரி போலீஸார் கைது செய்தனர்.
புதுவையைச் சேர்ந்த கிருஷ்ணா சர்மா என்பவர் ஜிப்மர் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது செல்போன் எண்ணிற்கு ஆன்லைன் லிங் ஒன்று வந்தது.
அந்த லிங்கை பதிவிறக்கம் செய்த பிறகு அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் வேறு ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், கிருஷ்ணா சர்மாவின் வங்கி கணக்கில் இருந்து ஜார்கண்ட்டில் உள்ள வங்கிக் கணக்கிற்குப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த வங்கிக் கணக்கு யாருடையது என தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே அந்த வங்கிக் கணக்கின் பயனாளர் சென்னைக்கு வந்தது போலீஸாருக்கு தெரியவந்தது.
உடனடியாக சைபர் கிரைம் போலீஸார் சென்னையில் அந்த கும்பலை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அசாமுதின் அன்சாரி, மகேஷ்குமார் என்பதும் இவர்கள் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார் ரூ.35 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஜார்கண்டில் இருப்பதால் அவரை பிடிக்க போலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
newstm.in